இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை!
ராகி தோசை போல ஒரு சத்தான டிபன் ஐட்டத்தைப் பார்க முடியாது. அதிலும் ராகியுடன் முருங்கைக் கீரையும் கலந்து தோசை சுடும்போது அது கூடுதல் சுவையாகவும், சத்தாகவும் மாறி விடுகிறது.
அப்படிப்பட்ட ராகி முருங்கைக் கீரை தோசையைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு ஒரு கப்.
2. சின்ன வெங்காயம் 20 பொடியாக நறுக்கியது.
3. முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி அளவு.
4. பச்சை மிளகாய் இரண்டு பொடியாக நறுக்கவும்.
5. சீரகம் ஒரு ஸ்பூன்
6. உப்பு தேவைக்கு ஏற்ப
7. நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய்
8. கருவேப்பிலை, மல்லித்தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு.
செய்முறை:
1. ராகி மாவு, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து ஒரு பவுலில் கலக்கி கொள்ளவும்.
2. இந்த மாவில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், முருங்கைக்கீரை, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்க்கவும்.
3. ராகி முருங்கை கீரை கலந்த கலவை மாவை தோசையாக மெல்லியதாக தோசை கல்லில் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து நல்லெண்ணெய் சிறிது சிறிதாக தடவி விடவும்.
4. மாவு வெள்ளையாக தென்படாமல் நல்லெண்ணெய் தடவி இருபுறமும் நன்றாக மொறுமொறுவென்று தோசை வார்த்தெடுக்கவும். ஒவ்வொன்றாக இதே போல் ஊற்றி சூடாக பரிமாறவும்.
5. ராகி முருங்கை கீரை தோசைக்கு சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி அவரவர் விருப்பத்திற்கு செய்து பரிமாறவும்.
*. ராகி தோசை சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள்:
1. ராகி புரதச்சத்து நிறைந்த ஒரு சிறு தானியம் ஆகும். புரதம் உடலின் வளர்ச்சிக்கும், தசைகள் உருவாவதற்கும் அவசியம் தேவை.
2. ராகி இரும்பு சத்து நிறைந்த மூலப்பொருளாகும் ரத்த சோகை அதாவது (அனிமியா) தடுக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றல் அளிக்கவும் இது உதவுகிறது.
3. ராகி நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.அதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் உணவு செரிமானத்தை சீராக்குகிறது.
4. இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதனால் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.நீரழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
5. நார்ச்சத்து மற்றும் புரதம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து அதிகப்படியான உணவு உண்பதை தடுக்கிறது. எனவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது நல்ல சிறந்த உணவு ஆகும்.
6. ராகில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும்.
7. ராகி பிறந்த குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சத்தான உணவாகும்.
8. எந்த உணவையும் அளவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் இது போன்ற சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.