பெண்களுக்கு பலம் தரும்.. கருப்பு உளுந்தங்கஞ்சி .. வரலாறு கூறும் சமையல் (பகுதி 4)
Jan 31, 2026,12:30 PM IST
- பாவை. பு
அந்த காலத்தில் 10 குழந்தைகளைக் கூட சர்வ சாதாரணமாக பெற்றெடுத்தார்கள். நிறைமாத கர்ப்பிணிகள் வீட்டு வேலை மட்டுமல்லாமல் காட்டு வேலையையும் சேர்த்தே செய்தார்கள் என்றால் அவர்களின் உடல் வலு எப்படி இருந்திருக்கும். அவர்களின் உணவு முறை எதை சார்ந்திருந்திருக்கும்.
இன்றைக்கு ஒரு குழந்தையை பெற்றெடுக்க கூட சிரமப்பட்டு நிற்கிறார்கள். ஏன் இந்த நிலை?
உலகளவில் 13 சதவீதம் முதல் 30 சதவீத தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையாலும், 17.5சதவீத பேர் மலட்டுத்தன்மை பிரச்சினையாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்று (WHO) உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இந்தியாவில் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது என்றும் 16 ஜோடி தம்பதிகளில் 1 ஜோடி தம்பதிக்கு குழந்தை கிடைப்பதில் பெரும் சிரமப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில் ஆண் மலட்டுத்தன்மை 20 சதவீதம் முதல் 30 சதவீதத்தாலும், பெண் மலட்டுத்தன்மை 20 முதல் 35 சதவீதத்தாலும், ஆண் பெண் இருவராலும் 25 சதவீதம் முதல் 40 சதவீதத்தாலும், கண்டறிய முடியாத நிலையில் 10 முதல் 20 சதவீதத்தாலும் கருவுறாமை நிகழ்வு நிகழ்கிறது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
30 ஆண்டுகளில் மட்டும் எப்படி இந்த குழந்தையின்மை மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சினை இவ்வளவு விசுவரூபம் எடுத்துள்ளது. இதன் ஆய்வு அறிக்கையும் நமக்கு தலைசுற்றலை வரவைக்கின்றன. நாம் சாப்பிடும் உணவே காரணம் என்கின்றார்கள்.
வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது, கத்தரிக்காய் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது, அவரைக்காய் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது, சுரைக்காய் சாப்பிட்டால் கிட்னிக்கு நல்லது, என்றெல்லாம் பட்டியல் போட முடியாது, ஏனென்றால் அந்த காய்கறிகளை விளைவிக்க கொட்டப்படும் ரசாயன உரங்கள் ஒருபுறம் நம் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டு இருக்கிறது என்றால், மறுபுறம் ஹைபிரிட் விதைகள் கரு உருவாக்கத்தையே சிதைக்கிறது.
நாட்டு பாரம்பரிய விதைகளை தேர்வு செய்து அதை பயிர் செய்து உணவாக உட்கொண்ட வரையில் எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் உள்ளே புகுந்ததோ அப்போதே எல்லா உடல்நலப் பிரச்சனையும் அழையா விருந்தாளியாக வந்துவிட்டது.
ஹைப்ரிட் விதைகள் மலட்டுத்தன்மை உடையவை அதனை(மறுசுழற்சி முறையில்) மறுபடியும் விளைவிக்கக் முடியாது, புதியதாக விதை வாங்கி தான் போட வேண்டும். பாரம்பரிய விதைகளை கொண்டு விவசாயம் செய்து வந்த விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஹைப்ரிட் விதைகளை அறிமுகம் செய்தது பன்னாட்டு நிறுவனங்கள்.
இந்த விதைகள் நன்கு செழித்து வளரும், பெரும் மகசூலை தரும் பருவகால நிலையை சமாளித்து கொள்ளும் என்றெல்லாம் கூற விவசாயிகளும் இதனை நம்பி இதை வாங்கி விதைத்தார்கள்.கூடவே அவர்கள் கொடுத்த ரசாயன உரங்களையும் என்ன ஏதென்று கேட்காமல் வாங்கி கொட்டினார்கள்.
அவர்கள் சொன்னத போல் தான் எல்லாம் நடந்தது ஆனால் விதைக்காக அவர்களிடமே கையேந்த வேண்டிய நிலை, அவர்கள் சொல்வது தான் விலை ,இதை சற்றும் எதிர்பாராத விவசாயிகள் வேற வழியில்லாமல் அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு நமது பாரம்பரிய விவசாயத்தையும் உடலாரோக்கியத்தையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைத்து விட்டார்கள்.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் விதை விற்பனை மூலமாகவே வருடத்திற்கு 1 லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது ஆண்டுக்கு. மலட்டுத்தன்மையுடைய விதைகள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளின் விதைகள் எப்படி முளைப்புத்திறன் அற்றதோ, அதை உண்டு வாழும் நாமும் அதே மலட்டுத் தன்மையுடைய நிலைக்கு வந்துள்ளோம்.
இதன் காரணமாகவே கருவுறாமை (Infertility) மலட்டுத்தன்மை (sterility) மையங்கள் மூலைக்கு ஒன்றாக உருவெடுத்துள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த முளைப்புத்திறன் உடைய நாட்டு விதைகளை நாமும் பயன்படுத்திக்கொண்டு வந்த வரை வீரியமும் நம்முடன் வந்தது. அது குறைந்தது வீரியமும் குறைந்தது.
உளுந்தின் மகத்துவம்:
உளுந்து தெற்காசியாவை பூர்விகமாகக்கொண்டது. குறிப்பாக இந்தியா அதிகளவில் உளுந்து உற்பத்தியை கொண்டிருந்தாலும், இந்தியாவின் உளுந்து தேவைக்கு 75 சதவீதம் மியான்மர் மற்றும் பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் உளுந்து உற்பத்தியும் நுகர்வோர் தேவைக்குமான இடைவேளி அதிகரித்துள்ளதாலும், உள்நாட்டு விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்கவும் இறக்குமதியை சார்ந்துள்ளது. சமீபத்தில் கூட மத்திய அரசு உளுந்து இறக்குமதிக்கு ஓராண்டு காலத்திற்கு(2025-26) வரிவிலக்கு அளித்துள்ளது.
நமது முன்னோர்கள் உளுந்தின் மகத்துவத்தை அறிந்து தான் அதை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டார்கள். உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு, உளுந்தங்கஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்று தினசரி சமையலில் இருக்கும்.
உளுந்தை தோல் நீக்காமல் அப்படியே சமையலுக்கு பயன்படுத்தும் போது தான் அதன் ழுழ பலனும் கிடைக்கும். இட்லிக்கு கூட தோல் நீக்காமல் தான் உபயோகித்தார்கள்.
உளுந்து பெண்கள் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது. குறிப்பாக கருப்பை வளர்ச்சிக்கும் இடுப்பெலும்பு வலுவாக்கும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் இடுப்புவலிக்கு கருப்பு உளுந்தை விட சிறந்ததொரு மருந்தில்லை.
உளுந்து, கால்சியம் நார்ச்சத்து பொட்டாசியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்த தானிய வகை. உளுந்தின் தோலில் தான் இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது, தோல் நீக்காத உளுந்தை சமையலுக்கு பயன்படுத்தும் போது தான் நமக்கு முழுமையாக பலன் கிடைக்கிறது. இதை அறிந்த நமது முன்னோர்கள் தோல் நீக்காமல் பாரம்பரிய விதை மூலம் நாட்டு மாட்டு உரம் கொண்டு விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் தானியங்கள் உடலுக்கு உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் இருந்தது.
இதன் காரணமாகவே அந்த காலத்தில் கருப்பையின் ஆரோக்கியத்தால் ஆரோக்கியமான முறையில் நிறைய குழந்தைகளை பெற்றெடுக்க முடிந்தது.
இன்றைய காலத்தில் வெள்ளை உளுந்து சந்தைக்கு வந்துவிட்டது. அதுவும் ஹைபிரிட் ரகங்களில், அரிசியையும் உளுந்தையும் வெள்ளையாக இருப்பதையே இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். அது வெறும் சக்கை. சரி இப்போது கருப்பு உளுந்தில் செய்யப்படும் கஞ்சி குறித்து பார்ப்போம்.
நாட்டு ரக கருப்பு உளுந்து கஞ்சி :
இதன் மகத்துவம் அறிந்தவர்கள் இதை இன்றும் செய்கிறார்கள். கிராமங்களில் இதை களி மற்றும் சோறு வடிவிலும் ஒருசில இல்லங்களில் மணக்கிறது.
கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்
தோல் நீக்காத கருப்பு உளுந்து -1கப்
வெல்லம்-2 டேபிள்ஸ்பூன்
உப்பு- சிறிதளவு
ஏலக்காய் தூள்
தேங்காய் துருவல்
தண்ணீர் - தேவைக்கேற்ப
உளுந்தை வாணலியில் சிவக்க வறுத்து மிக்சியில் நைசாக பொடித்து கொள்ள வேண்டும். பொடித்த மாவில் 3 டேபிள்ஸ்பூன் மட்டும் தனியாக ஒரு சிறிய கப்பில் எடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மாவை கொட்டி படாமல் கரைத்து கொண்டு. பிறகு அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவை இதில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து பிறகு உப்பு, வெல்லம், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் போட்டு இறக்கி விடவும்.
ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் குறைவில்லாத உளுத்தங்கஞ்சி தயார்.