தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாகப் போகிறதா.. பலருக்கும் இந்தக் கேள்வி உள்ளது. ஆனால் இதற்கு இப்போது விடை காணுவது என்பது சிக்கலானது.
ஏனெனில், அது மக்களின் எதிர்பார்ப்புகள், அரசியல் பார்வைகள் மற்றும் வருங்கால நிகழ்வுகளைப் பொறுத்தது. இருப்பினும், அவரது அரசியல் நுழைவு மற்றும் தற்போதைய நிலை குறித்த சில விஷயங்களைப் பார்த்தால் ஒரு அனுமானத்திற்கு வர முடியும்.
விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு ஒரு கணிசமான மக்கள் ஆதரவு ஏற்கனவே இருந்தது. அதைத்தான் தற்போது அரசியல் மூலம் அறுவடை செய்ய களம் இறங்கியுள்ளார்.
"தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியை பிப்ரவரி 2024 இல் தொடங்கினார். இது திடீர் முடிவு அல்ல, பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். காரணம் தனக்கு அரசியல் ஆசை உள்ளது என்று முன்கூட்டியே சொல்லியிருந்தார் விஜய்.
கட்சி தொடங்கிய பிறகு, கட்சிப் பெயர் திருத்தம் (தமிழக வெற்றிக் கழகம் என), முதல் மாநாடு, மாவட்ட செயலாளர்கள் நியமனம், செயற்குழு கூட்டம் என கட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தங்களது களம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதுதான் என்றும் முன்கூட்டியே அறிவித்து விட்டார் விஜய். இடைப்பட்ட இந்த காலத்தில் அவரது செயல்பாடுகள் மிக மிக நிதானமாக இருக்கின்றன. இதுதான் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அவரது எதிர்ப்பாளர்கள் இதையே சாதகமாக்கி அவருக்கு எதிராக கடுமையாக வசை பாடி வருகிறார்கள், கிண்டலடித்து வருகிறார்கள்.
ஆனால் விஜய் என்னவோ தனது நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் மிக மிகத் தெளிவாக இருப்பது போலவே தெரிகிறது. தனது டார்கெட் என்ன, தான் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது. பேச வேண்டியவர்களுடன் அவர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார் என்றுதான் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் விஜய் தெளிவான முறையிலேயே நடை போட்டு வருவதாக தெரிகிறது.
ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது தீவிரமாக ஆரம்பித்துள்ளது விஜய்யின் செயல்பாடுகள். சமீபத்தில் மடப்புரத்தில் காவல் நிலைய மரணத்தால் பாதிக்கப்பட்ட அஜீத்குமார் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் வழங்கினார்.
காவல் நிலைய மரணங்களைக் கண்டித்து சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தினார். இதில் அவர் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். "இது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. சாரி மாடல் ஆட்சி" என கடுமையாக விமர்சித்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி காவல் நிலைய மரணங்கள் குறித்து போராட்டம் நடத்தியது என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் காவல் நிலைய மரணத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பத்தினரையும் மேடையேற்றி பிற கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் விஜய்.
திமுக, அதிமுக-வை விட அதிக வாக்கு வங்கி உள்ள கட்சியாக தவெக தற்போது இருப்பதாக தவெக நிர்வாகிகள் கருதுகிறார்கள். கொள்கை அளவில் சமரசம் ஆகாத கட்சிகளுடன் தான் கூட்டணி அமையும் என்றும், சரியான நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. அது அதிமுகவா, டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவா என்பது தெரியவில்லை. ஆனால் விஜய் சரியான கூட்டணியை சரியான சமயத்தில் அமைப்பார் என்பது தவெகவினரின் நம்பிக்கையாக உள்ளது.
விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்து ஒரு வருடம் ஆனாலும், அரசியல் என்பது ரீ-டேக் இல்லாத ஒன்று என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை, திரும்பப் போக முடியாது.. போனால் மீண்டும் வர முடியாது என்றெல்லாம் கடுமையான சிக்கல்கள் நிறைந்த பாதைதான் அரசியல். இதையெல்லாம் விஜய் உணராமல் புரியாமல் இருக்க மாட்டார். தனக்கு முன்பு அரசியலுக்கு வந்த கலைஞர்களையெல்லாம் பார்த்து ஆய்ந்து விட்டுத்தான் அவர் இறங்கியிருப்பார் என்று நம்பலாம்.
அதேசமயம், விஜய் தனது கட்சியின் அடிப்படை கட்சி கட்டமைப்பை இன்னும் வலுப்படுத்தவில்லை என்றும், மாநகர், நகர், ஒன்றிய அளவிலான பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் தவெகவில் இல்லை. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் உடன் இருந்தனர், ஆனால் விஜய்யுடன் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றும், அறிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்துவது தமிழக அரசியலுக்கு போதாது என்றும் கூறப்படுகிறது.
சிலர், விஜய் அரசியலை வெறும் தேர்தல் என்று மட்டும் புரிந்துகொண்டிருக்கிறாரோ என்றும், கட்சி தொடங்கி இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போதுதான் ஆக்டிவ் மோடிற்கு வருகிறார் என்றும் விமர்சிக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும்போது, அவர் தனது வருமானம், பிளாக்பஸ்டர் படங்கள், பெரிய ரசிகர் பட்டாளம் போன்றவற்றை இழக்க நேரிடும். ஆனால் மக்களின் அன்பைப் பெற்றால் காலாகாலத்திற்கும் அவர்களது மனதில் ராஜாவாக கோலோச்ச முடியும், மக்களுக்கானதை செய்து தர முடியும்.
திமுக மற்றும் அதிமுக மீதான மக்கள் அதிருப்தி விஜய்க்கு சாதகமாக அமையலாம் என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இளைஞர்கள் மற்றும் கீழ்த்தட்டு மக்களிடம் விஜய்க்கு இருக்கும் கவர்ச்சிகர பிம்பம் அவருக்கு ஒரு கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றுத் தரும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பாதை இப்போதுதான் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. அவர் சில முக்கியமான மற்றும் தைரியமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது, மக்கள் மத்தியில் தன் கொள்கைகளை ஆழமாகப் பதிய வைப்பது, மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவு பலத்தை பெருக்குவது மற்றும் அரசியல் சவால்களை சமாளிப்பது போன்ற பல கடமைகளும் சவால்களும் அவருக்கு முன்னால் உள்ளன. அவரது ரசிகர்கள் ஆதரவு ஓட்டுகளாக மாறுமா, புதிய தலைமைகளுக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்வாரா என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் பாதையின் வெற்றி அமையும்.