விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!

Su.tha Arivalagan
Aug 02, 2025,09:23 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் ஓ.பன்னீர் செல்வம் திரும்பிப் பார்த்த நிலையில் அதை ஜஸ்ட் லைக் தட் தவிடு பொடியாக்கி விட்டது திமுக. இப்போது தவெக பக்கம் ஓபிஎஸ் போக வாய்ப்பில்லை என்றாகி விட்டது. 


ஒரு வேளை ஓபிஎஸ் திமுக பக்கம் போகலாம் அல்லது பாஜக அவரை சமாதானப்படுத்தி தன் பக்கம் வைத்துக் கொள்ளலாம்.  அதேசமயம், எடப்பாடி பழனிச்சாமியை பாஜக எப்படி சமாளிக்கும் என்று தெரியவில்லை. 


தமிழ்நாட்டு அரசியலில் ஓபிஎஸ் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. மறைந்த ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தே பல உயர் பதவிகளை எட்டியவர். தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை முதல்வர் என்றால் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று உயர்ந்த ஆளுமைகளை மட்டுமே பார்த்து நிலையில் சற்றும் சம்பந்தமே இல்லாமல் முதல்வர் பதவியில்  அமர்ந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவே அவரை முதல்வர் பதவியில் அமர்த்தியபோது தமிழ்நாடே ஆச்சரியப்பட்டது.




இத்தனைக்கும் அதிமுகவில் அப்போது பல சீனியர்கள் இருந்தனர். அனுபவசாலிகள் இருந்தனர். ஆனால் யாருக்கும் கிடைக்காத அதிர்ஷட்ம் ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்தது. இதனால் அவரது ஜெயலலிதா விசுவாசமும் பல மடங்கு பெருகியது. ஒரு முறை அல்ல.. 3 முறை முதல்வராக இருந்துள்ளார் ஓ.பி.எஸ். எடப்பாடி பழனிச்சாமிக்குக் கூட கிடைக்காத அதிர்ஷ்டம் இது. அதாவது ஜெயலலிதா இருந்தவரை அவரது முதல்வர் சாய்ஸ் ஓ.பி.எஸ்தான். அவரைத் தாண்டி வேறு யாரையும் ஜெயலலிதா சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.


கட்டம் கட்டப்பட்ட ஓபிஎஸ்


அப்படிப்பட்ட செல்வாக்குடன் இருந்து வந்த ஓ.பி.எஸ். ஜெயலலிதா மறைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சம் கட்டம் கட்டப்பட்டு ஓரம் கட்டப்பட்டு விட்டார். இன்று அதிமுகவுக்குள்ளேயே அவராால் வர முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. பாஜகவும் அவரை கண்டு கொள்ளாமல் விடவே வேறு வழியில்லாமல்தான் அவர் வேறு பக்கம் போக முடிவு செய்துள்ளார்.


ஓபிஎஸ்ஸுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரிடம் வேறு சில கெட்டிக்காரத்தனம் இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது இவரது தலைமையில்தான் அனைத்து மாநாடுகளையும் திட்டமிடுவார் ஜெயலலிதா. இவரையும், நயினார் நாகேந்திரன், செங்கோட்டையன், முத்துச்சாமி போன்றோரிடம்தான் முக்கியப் பணிகளை ஒப்படைப்பார். அந்த அளவுக்கு களப் பணிகளை கச்சிதமாக செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.


இப்படி ஒரு காலத்தில் கோலோச்சிய இந்த தலைவர்களில் இப்போது செங்கோட்டையன் அதிமுகவிலேயே நீடிக்கிறார். முத்துச்சாமி திமுக பக்கம் போய் விட்டார். அமைச்சராகவும் இருக்கிறார். நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து அதன் மாநிலத் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருக்கிறார். ஓபிஎஸ் மட்டும்தான் தற்போது ஓரம் கட்டப்பட்ட நிலையில் உள்ளார்.


திமுகவா.. விஜய்யா.. பாஜகவா




ஓபிஎஸ் முன்பு தற்போது 3 ஆப்ஷன்கள் உள்ளன. இதில் அவரே விரும்பிய முதல் ஆப்ஷன் தமிழக வெற்றிக் கழகம் கட்சி. தனது ஆதரவு வட்டாரத்தோடு வருகிறேன் என்று ஓபிஎஸ் தரப்பில் விஜய் கட்சியிடம் முதலில் தகவல் போனதாம். அங்கு என்ன மாதிரியான ஆலோசனை நடந்தது என்று தெரியவில்லை. எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் டக்கென யு டர்ன் போட்டு திமுக பக்கம் போய் விட்டார் ஓபிஎஸ்.  முதல்வரை அவர் ஒரே நாளில் 2 முறை பார்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


திமுக தரப்பில் ஓ.பி.எஸ்ஸுக்கு சில உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டதால் 5 சீட் வரை தருகிறோம், முக்கிய அமைச்சர் பதவியைத் தருகிறோம் என்று திமுக தரப்பில் கூறப்பட்ட உறுதிமொழிகள் ஓபிஎஸ் சந்தோஷமும், திருப்தியும் தெரிவித்ததாக சொல்கிறார்கள்.  தனது ஆதரவாளர்களிடமும் இதை ஓபிஎஸ் கூறியபோது அவர்களும் திருப்தி தெரிவித்ததாக சொல்கிறார்கள். இதனால்தான் பாஜக தரப்பு பரபரப்பானது. ஓபிஎஸ் அதிருப்தியை முதலில் கண்டு கொள்ளாத பாஜக, இப்போது திமுக அதில் லாபம் பார்க்க களம் இறங்கியதால் பதட்டமானது. இதையடுத்தே ஓபிஎஸ்ஸிடம் பாஜகவிலிருந்து சமாதானம் பேசியதாக சொல்கிறார்கள்.


ஆனால் ஓபிஎஸ் தன்னையும், தனது ஆதரவாளர்களையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லி விட்டாராம். அதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறி விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இது சாத்தியமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிடிவாதமாக இருப்பதாக சொல்கிறார்கள். இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கு மீண்டும் வரும் பிரதமர் மோடியுடன், முதலில் ஓபிஎஸ்ஸை சந்திக்க வைப்போம். பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதேசமயம், ஓபிஎஸ் யார் பக்கமும் போய் விடாமல் தடுக்கவும் தீவிரமாக உள்ளதாம்.


திமுகவின் அதிரடி ஸ்கெட்ச்




திமுகவைப் பொறுத்தவரை தனது கூட்டணியை விஸ்தரிக்க முடிவு செய்து விட்டதாம். யாரெல்லாம் வருகிறார்களோ எல்லோரையும் வளைத்துப் போடும் திட்டம் திமுகவிடம் உள்ளதாம். காரணம் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், வருகிற தேர்தலில் மற்ற கட்சிகளை விட தவெகதான்  திமுகவுக்கு கடும் சவாலைத் தரும் வகையில் உள்ளதாக தெரிய வந்துள்ளதாம். பல தொகுதிகளில் திமுகவுக்கு, தவெக தண்ணி காட்டும் என்று கூறப்பட்டதால் பரபரப்படைந்துள்ள திமுக வட்டாரம், தேமுதிக, பாமக, ஓபிஎஸ் என எல்லோரையும் உள்ளே கொண்டு வர முடிவு செய்துள்ளதாம்.


இதை பாஜகவும் மோப்பம் பிடித்துள்ளது. தவெகவும் உணர்ந்துள்ளது. இதில் பாஜக தான் டென்ஷனாகியுள்ளதாம். அதேசமயம், தவெக கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் இருக்கிறதாம். காரணம், நமக்கு கூட்டணி இல்லாமலேயே இத்தனை பயம் பயப்படுகிறார்கள். இதில் நாளையே அதிமுக, பாமக என புதிய கூட்டணி அமைந்தால் திமுகவை எளிதாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் தவெக இருக்கிறதாம். அதேசமயம், ஓபிஎஸ்ஸை தவற விட்டு விட்டதாக தவெகவுக்குள் ஒரு ஏமாற்றம் இழையோடிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரசியல் கணக்குகள் எப்போதுமே ஒரே விடையை அளிப்பதில்லை.. அவ்வப்போது விடைகள் மாறத்தான் செய்யும். எனவே இந்தத் தேர்தலில் எப்படியெல்லாம் கணக்குகள் மாறப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.