திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?

Su.tha Arivalagan
Aug 26, 2025,02:42 PM IST

சென்னை : தமிழக அரசியலில் தற்போதுள்ள நிலவரப்படி திமுக, அதிமுக, தவெக என 2026 தமிழக சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி உள்ளது. மறுபக்கம் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது. தற்போது வரை தவெக கூட்டணியில் எந்த கட்சியும் இணையாததால், தனித்து போட்டி என்ற நிலைபாட்டிலேயே விஜய் இருந்து வருகிறார். ஆனால் அதிமுக, திமுக.,வின் நிலை அப்படி கிடையாது. 


அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே அதிகாரப்பூர்வமாக உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் அப்படியே உள்ளன. 


தேமுதிக, பாமக இரு கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை இதுவரை அறிக்காமல் உள்ளனர். இவர்களின் முடிவை பொறுத்து தான் அதிமுக-திமுக.,வில் யாருக்கு பலம் அதிகரிக்க போகிறது என்பது தெரியும். அனைத்து கட்சிகளும், மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி, தங்களுக்கு இருக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 




அதிமுக, திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்றாலும், தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், இந்த இரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிட்டு, அவற்றில் எத்தனை இடங்களில் தனியாக வெற்றி பெற போகிறார்கள் என்பது மிக மிக முக்கியம். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 117 இடங்கள் தேவை. இந்த 117 என்ற பெரும்பான்மை நிலையை பெற வேண்டும் என்றால் தலா 130 முதல் 140 இடங்களிலாவது அதிமுக மற்றும் திமுக.,வும் போட்டியிட வேண்டும். இவற்றில் குறைந்தபட்சம் 120 இடங்களையாவது இவர்கள் கைப்பற்ற வேண்டும்.


117 என்ற பெரும்பான்மை நிலையை விட குறைவாக பெற்றால், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி நிச்சயமாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்படும். அதோடு கூட்டணி கட்சிகள் முன் ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் பங்கு என வைக்கும் நிபந்தனைகளை ஏற்றே ஆக வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படும். அதிமுக- திமுக இரு கட்சிகளுமே பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் கூட்டணி கட்சிகள் மட்டுமே அடுத்து யார் ஆட்சியின் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை பெறும்.


கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலை ஏற்படாமல் இருக்கவும், கூட்டணி கட்சிகள் தரும் நெருக்கடி நிலை மற்றும் அழுத்தம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க 117க்கும் அதிகமான இடங்களில் தனித்து வெற்றி பெற வேண்டிய நிலையில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் உள்ளன. 




அதிமுக கூட்டணியை பொருத்த வரை தற்போது அதிமுக, பாஜக இரண்டு கட்சிகள் மட்டுமே. இனி தேமுதிக, பாமக, ஒருவேளை தவெக வந்தாலும் அதிமுக.,விற்கு 120 இடங்கள் போக மீதமுள்ள 114 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்படாது. ஒருவேளை அதிமுக-பாஜக மட்டுமே இருந்தால் தொகுதி பங்கீடு இன்னும் சுலபமாகி விடும். 


ஆனால் திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இருப்பதால் தொகுதி பங்கீட்டிலேயே திமுக.,விற்கு நெருக்கடியான சூழலும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. காரணம் இப்போது மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் உள்ளது. நாளை வேறு கட்சி ஏதாவது வந்தால் அவர்களுக்கும் சீட் தர வேண்டியிருக்கும்.


பொறுத்திருந்து பார்ப்போம்.. சீட்டுகளை எப்படிப் பிரித்து களம் காணப் போகிறார்கள் என்பதை.