தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பொது பக்தர்களின் சிரமமற்ற தரிசனத்தை உறுதி செய்யவும் அறநிலையத்துறை அதிரடி உத்தரவுகளையும் புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் மொபைல் போன்களுக்கு முழுமையான தடை :
கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லவும், கோயிலுக்குள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செஃபி (Selfie) மற்றும் சமூக வலைதளங்களுக்காக ‘ரீல்ஸ்’ (Reels) பதிவிடுவதற்கும் அறநிலையத்துறை முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.
அமலாக்க தேதி: இந்தத் தடை உத்தரவு வரும் செப்டம்பர் 1, 2026 முதல் அனைத்து திருக்கோயில்களிலும் தீவிரமாக அமல்படுத்தப்படும்.
பாதுகாப்புப் பெட்டக வசதி: கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு, கோயில் நுழைவுவாயில் அல்லது செருப்பு வைக்கும் இடங்களில் வைப்புப் பெட்டக வசதிகள் (Locker facility) ஏற்படுத்தப்படும்.
கட்டணம்: ஒரு செல்போனுக்குக் கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ITMS மென்பொருள் வழியாகக் ரசீது வழங்கப்படும்.
கண்காணிப்பு: செல்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது குறித்த அறிவிப்புப் பலகைகள் கோயில் வளாகத்தில் வைக்கப்படும். மேலும் விதிகளை மீறுவோரைக் கண்காணிக்கச் சிறப்புப் பணியாளர்கள் மற்றும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
விஐபி தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் :
திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் (VIPs) கோயில் தரிசனத்திற்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளையும் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்...
முன்கூட்டியே தகவல் தெரிவித்தல்: பிரபலங்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வருவதாக இருந்தால், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாகவே கோயில் நிர்வாகத்திற்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொது மக்களுக்கு இடையூறின்மை: விஐபிக்களின் வருகையின் போது, வரிசையில் நிற்கும் பொதுப் பக்தர்களின் சாமி தரிசனத்திற்கோ அல்லது அவர்களின் இயக்கத்திற்கோ எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது.
புகைப்படம் / வீடியோ எடுக்கத் தடை: விஐபி தரிசனத்தின் போதும் கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ பதிவு செய்யவோ எவ்வித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது.
பாதுகாப்பு நபர்கள் கட்டுப்பாடு: பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே விஐபிக்களுடன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இறைவழிபாட்டின் அமைதியையும், ஆகம விதிகளையும், கோயில்களின் புனிதத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.