பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
டில்லி : டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தேர்தல் ஆணையர் மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார். பீகாரில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் ஏராளமானவர்களின் ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன என குற்றம்சாட்டினார்.
பீகாரில் மிகப் பெரிய அளவில் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாக சமீபத்தில் ஒரு பரபரப்பு புகாரை தேர்தல் கமிஷன் மீது தெரிவித்தார் ராகுல் காந்தி. விரைவில் அடுத்த ஹைட்ரஜன் குண்டை வீச போவதாகவும் அவர் கூறி இருந்தால். அடுத்து என்ன அவர் சொல்லப் போகிறார் என அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.
அவர் கூறுகையில், தலைமை தேர்தல் கமிஷனராக இருக்கும் ஞானேஷ் குமார், ஜனநாயகத்தை அழித்தவர்களை காப்பாற்றுகிறார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரை போல் கர்நாடகாவில் 6,018 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. பீகாரை போல் கர்நாடகாவிலும் ஓட்டுத்திருட்டு நடந்துள்ளதை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் தேர்தல் கமிஷனின் உதவியுடன் இந்த முறைகேடு நடக்கிறது. இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றும் அவர் சாடினார்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார் ராகுல் காந்தி. "இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களை தேர்தல் கமிஷன் பாதுகாக்கிறது" என்று அவர் கூறினார். தான் வெறுமனே குற்றம் சாட்டவில்லை என்றும் தான் சொல்லும் புகார்களுக்கு உறுதியான ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஆலந் என்ற தொகுதி உள்ளது. அங்கு 6,018 வாக்குகளை நீக்க முயற்சி நடந்தது என்று ராகுல் காந்தி கூறினார். 2023 தேர்தலில் ஆலந் தொகுதியில் எத்தனை வாக்குகள் நீக்கப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால், 6,018 வாக்குகள் நீக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பூத் அளவிலான அதிகாரிக்கு இதில் சந்தேகம் வந்துள்ளது. அவரது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை அவர் கண்டுபிடித்தார். யார் நீக்கியது என்று விசாரித்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் நீக்கியது தெரிந்தது. ஆனால், அந்த பக்கத்து வீட்டுக்காரர் தான் நீக்கவில்லை என்று கூறினார். வாக்கு நீக்கப்பட்டவருக்கும், நீக்கியவருக்கும் எதுவும் தெரியாது. ஏதோ ஒரு சக்தி இந்த வேலையை செய்துள்ளது. யார் அது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்றார். மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் இந்த திருட்டு நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து இந்த "குற்றத்தை" செய்துள்ளது என்று அவர் சாடினார். இது அரசியலமைப்புக்கு எதிரான குற்றம் என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் புகார்கள் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. செப்டம்பர் 1ஆம் தேதி ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை நடத்தினார். "வாக்காளர் உரிமை யாத்திரை" என்ற அந்த யாத்திரையின் நிறைவு விழாவில் அவர் பேசினார். அப்போது, "வாக்கு திருட்டு" குறித்து விரைவில் ஒரு "ஹைட்ரஜன் குண்டை" வெடிக்கப் போவதாக கூறினார். அதன் பிறகு பிரதமர் மோடி நாட்டுக்கு முகம் காட்ட முடியாது என்றும் அவர் கூறினார் என்பது நினைவிருக்கலாம். ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.