சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!
டெல்லி: 10 வருடமாக மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு நபர் சாமியார் வேடம் பூண்டு தனது மனைவியைத் தேடி வந்தார். அதன் பிறகு அவர் செய்த காரியம், டெல்லியை அதிர வைத்துள்ளது.
கிரண் ஜா என்பவர் தனது மகன், மருமகள், பேத்தியுடன் டெல்லியில் வசித்து வருகிறார். கிரண் ஜாவின் கணவர் பிரமோத் ஜா. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 10 வருடமாக தனித் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் மர்ம நபரால் கிரண் ஜா தனது வீட்டில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் பரபரப்பான தகவல் கிடைத்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஒரு சாமியாரின் பெயர் அடிபட்டது. அவர்தான் கடைசியாக வீட்டுக்கு வந்து போயுள்ளார். அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் விசாரித்தபோது, அவர் வேறு யாருமல்ல, கிரண் ஜாவின் கணவர் பிரமோத் தான் என்று தெரிய வந்தது. சமீபத்தில்தான் அவர் பீகாரிலிருந்து டெல்லி வந்துள்ளார். மனைவியையும் சந்தித்துள்ளார். சாது வேடத்தில் வந்த அவர்தான் கொலை செய்தது என்பதும் உறுதியானது. இதையடுத்து அவரைப் பிடிக்க தற்போது தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை.
கொலை நடந்தபோது கிரண் ஜாவின் டெல்லியில் இல்லை. அவர் பீகாரில் வேலை பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன் இல்லாத நேரத்தில் வந்து மனைவியைக் கொலை செய்து விட்டுத் தப்பியுள்ளார் பிரமோத் ஜா. பிரமோத் ஜாவின் பூர்வீகம் பீகார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.