ஹைதராபாத்தில் சார்மினார் அருகே கொடுமை.. வீட்டில் பிடித்த தீ பரவி.. 17 பேர் பலியான பரிதாபம்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சார்மினார் அருகே ஒரு வீட்டிலிருந்து கிளம்பிய பரவி அதில் சிக்கி 17 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சார்மினாருக்கு வெகு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் மின்கசிவு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீப்பிடித்து பரவியதாக தெரிய வந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தோர் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் கீழே உள்ள கடைக்கு மேலே இருந்த வீட்டில்தான் தங்கியிருந்தனர். அதிக அளவிலான நபர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் உயிர்ப்பலியும் அதிகமாக இருந்துள்ளது. மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தீவிபத்தில் சிக்கி காயமடைந்தோரை நேரில் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காயமடைந்தோரை சந்தித்துப் பேசினேன். மிகவும் சோகமானது இது. யாரையும் இதில் குறை சொல்வதற்கு இல்லை. இருப்பினும் இதுபோன்ற குடியிருப்புகளில் பாதுகாப்பு குறித்து காவல்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி, மின்சாரத்துறை ஆகியவை சற்று கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.
தீவிபத்து நடந்த பகுதி மிகவும் நெரிசலானது. நிறைய நகைக் கடைகள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிதியும் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.