யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி

Su.tha Arivalagan
Jan 31, 2026,11:30 AM IST

சென்னை: என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நான் யாரையும் தேர்தலில் ஜெயிக்க வைக்க அரசியலுக்கு வரவில்லை. நான் ஜெயிக்க வந்திருக்கிறேன் என்று கூறி தனது பாதையில் தான் தெளிாக இருப்பதை உணர்த்தியுள்ளார்.


என்டிடிவி சார்பில் சென்னையில் நடந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.


இந்த வரிசையில் விஜய்யை அவரது இருப்பிடத்திற்கே சென்று பேட்டி எடுத்துள்ளது என்டிடிவி குழு. அந்தப் பேட்டியின் சாராம்சத்தை தற்போது என்டிடிவி  வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:




விஜய் அரசியலுக்கு ஏனோ தானோ என்று வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் மிகவும் உறுதியாகவும், தெளிவான இலக்கோடும் இருக்கிறார். "அரசியல் தான் எனது எதிர்காலம்" என்பதில் அவர் ஐயப்பாடின்றி உள்ளார். தான் ஒரு குறுகிய கால அரசியல்வாதி அல்ல, நீண்ட காலப் பயணத்திற்காகவே களம் இறங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


பொதுவாகப் புதிய கட்சிகள் யாராவது ஒரு பெரிய கட்சி வெற்றி பெற உதவுவார்கள் என்ற பேச்சு இருக்கும். ஆனால் விஜய் அதை முற்றாக மறுத்துள்ளார். "நான் ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும்? நான் வெற்றி பெறுவேன். என் கூட்டத்திற்கு வரும் மக்கள் வெள்ளத்தை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று நம்பிக்கையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தனது இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். தனது அரசியல் வருகைக்காகத் தான் தனது திரைப்படம் இலக்கு வைக்கப்படுவதை அவர் உணர்ந்துள்ளார். இதற்காகத் தான் மனதளவில் தயாராக இருந்த போதிலும், தயாரிப்பாளர் சந்திக்கும் இடர்பாடுகள் தனக்கு வருத்தமளிப்பதாகக் கூறினார்.


தனது அரசியல் பயணத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை முன்மாதிரிகளாக விஜய் கருதுகிறார். மேலும், திரையுலகில் ஷாருக்கானின் ரசிகர் என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார். தற்கால அரசியலில் தனது ரசிகர்களைக் கட்சித் தொண்டர்களாக மாற்றுவதே தனது முதல் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.


கருர் மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தன்னை உலுக்கிவிட்டதாக அவர் கூறினார். அந்தச் சம்பவம் இன்றும் தனது மனதை வாட்டுவதாகவும், அதை எதிர்கொள்ளத் தனக்குச் சற்று கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் வெளிப்படையாகப் பேசினார்.


விஜய்யின் இந்த நேர்காணல், அவர் வெறும் திரைப் பிரபல்யமாக மட்டும் இல்லாமல், ஒரு தீர்க்கமான அரசியல் தலைவராக உருவெடுக்க விரும்புவதைக் காட்டுகிறது. 2026 தேர்தல் களம் ஒரு முக்கோணப் போட்டியாக மாறும் என்பதையும், அவர் ஒரு வலுவான சக்தியாக உருவெடுப்பார் என்பதையும் இந்த உரையாடல் கோடிட்டுக் காட்டுகிறது என்று என்டிடிவி தெரிவித்துள்ளது.