அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

Su.tha Arivalagan
Nov 06, 2025,11:13 AM IST

தைலாபுரம் : அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது நான் செய்த முதல் தவறு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதே போல் அன்புமணி மீது மீண்டும் பல குற்றச்சாட்டுக்களை ராமதாஸ் முன் வைத்துள்ளார்.


டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான பூசல் முடிவுக்கு வருவதாகவே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை தலை தூக்குகிறது. டாக்டர் ராமதாஸும் விடுவதாக இல்லை, அன்புமணியும் இறங்கிப் போவதாகத் தெரியவில்லை.


இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ் அன்புமணி குறித்து காட்டமாக பேசினார்.




அரசியலில் நான் சில தவறுகளை செய்துள்ளேன். அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது நான் செய்த முதல் தவறு. அன்புமணியை பாமக.,வின் தலைவராக்கியது நான் செய்த 2வது தவறு. சமீப காலமாக நடக்கும் விஷயங்களை கவனித்து வருகிறேன். அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியில்லை. அவரின் செயல்பாடுகள் அருவருக்கதக்க வகையில் உள்ளது. 


என்னை ஐயா என அழைத்தவர்கள், அங்கு சென்று என்னை திட்டுகிறார்கள். என்னுடன் 2 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். தெரியாமல் 3 எம்எல்ஏ.,க்கள் அன்புமணி பக்கம் சென்று விட்டார்கள். அமைதியாக நடந்து கொண்டிருக்கும் பாமக.,வில் பிளவு ஏற்பட்டு விட்டதாக மக்கள் பேசுகிறார்கள். பாமக.,வில் பிளவு என மற்றவர்கள் பேசும் வகையில் அன்புமணியின் செயல்பாடுகள் உள்ளது. எனது தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் எதிலும் வன்முறையோ, மோதலோ ஏற்பட்டது கிடையாது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


பாமக எம்எல்ஏ அருள் மீது அன்புமணியின் ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்ஏ.,வின் காரை வழி மறித்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இத தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பலர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்துள்ளார்.