நானே தான் எனக்குத் தோழி!
Oct 28, 2025,04:45 PM IST
- ஷீலா ராஜன்
அம்மா என்னம்மா கைல போன் இல்ல.. ஆனா பேசிகிட்டு இருக்கீங்க.. என்ன உங்க கூட நீங்க பேசிட்டு இருக்கீங்களா? என்றபடி வந்தான் பிரதீப்.
அச்சச்சோ கேட்டுடியா என்றபடியே அவனைப் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்தேன். அப்படி என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க என்றவனை கையைப் பிடித்து அழைத்து போய் சோபாவில் உட்கார்ந்தேன். பிரதீப் நான் இப்படி தான் பலமுறை எனக்கு நானே பேசிக் கொள்கிறேன், நீ கேட்டதில்லையா என்ற என்னை பிரதீப் வியந்து பார்த்தான்...
இன்னைக்கு ஒரு வாய்ஸ் ரெக்கார்டிங் இருந்துச்சு என்றேன்.. ஆமா நீங்க வேலை பார்க்கிற இடத்துல நிறைய முறை இந்த மாதிரி வாய்ஸ் ரெக்கார்டிங் பண்ணி இருக்கீங்க. அதான் எனக்கு தெரியுமே என்ற பிரதிபிடம் இன்னைக்கி நான் ஒரு கதை வாசிச்சேன் . அது ரொம்ப வித்தியாசமான அனுபவம். அந்த ஆடியோவை கேட்ட ஒரு குழந்தை கைதட்டி சிரிச்சது. எத்தனையோ பேர் என்னுடைய குரல் நல்லா இருக்கு அப்படின்னு பாராட்டி இருக்காங்க. ஆனா இன்னைக்கு ஸ்பெஷல் டே பிரதீப்.. அதனாலதான் நான் என்னையே பாராட்டிட்டு இருந்தேன்.. அப்பதான் நீ வந்தாய்.
அப்படி என்னமா ஸ்பெஷல்? என கையைப் பிடித்துக் கொண்ட பிரதிபிடம் இன்னைக்கு எங்க ஆடியோ ரெக்கார்டிங் ரூமுக்கு ஒரு பெற்றோர் அவங்களோட குழந்தையோட வந்தாங்க. அந்த குழந்தைக்கு காது கேட்காதாம்..சென்ற வாரம் தான் அந்த குழந்தைக்கு காது கேட்கும் கருவியை பொருத்தி இருக்காங்க....
சரி இந்த கதை புரியுதா பார்ப்போம் அப்படின்னு அந்த குழந்தையை நான் பேசிய கதையை கேட்க வச்சாங்க..அந்த குழந்தையோட ரியாக்ஷனை பார்க்கணுமே !!! இன்னும் அந்தக் குழந்தையின் முகம் எனக்கு கண்ணுலயே நிக்குது. அவ்வளவு மகிழ்ச்சி அந்த குழந்தைக்கு!!! நான் வாசிச்ச கதை அந்த குழந்தைக்கு ரொம்ப புடிச்சி இருந்தத அந்த குழந்தையோட முகபாவங்களை பார்த்து தெரிஞ்சுக்க முடிஞ்சது... கதையில ஒரு பாட்டு வரும். அந்த பாட்டு ரெண்டு வரி அந்த குழந்தை பாடுன உடனே அவங்க அம்மா ஓடி வந்து என்னை கட்டி பிடிச்சுக்கிட்டாங்க என்றேன் கலங்கிய கண்களுடன்.
என் குழந்தை புரிஞ்சிக்கிற அளவுக்கு உங்க உச்சரிப்பும் உங்களுடைய மாடுலேஷன் இருந்தது மேம். இந்த ஆடியோ பைல எனக்கு கொஞ்சம் அனுப்ப முடியுமா என்று கேட்டபோது அந்தத் தாயின் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் கொட்டியது. அதான் இன்னைக்கு நான் என்னையே பாராட்டிகிட்டேன்... என்னையே நான் பாராட்டுகிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... எத்தனையோ சமயங்களில் என்னோடு நான் பேசி தான் இன்றுவரை மகிழ்ச்சியாக வாழ்கிறேன் பிரதீப்' என்றபடியே மேஜை மீது இருந்த பழங்களை கழுவ ஆரம்பித்தேன்.
"அம்மா நீங்க நல்ல அரசாங்க வேலையில இருக்கீங்க.. கை நிறைய சம்பாதிக்கிறீங்க, பாக்கவும் அழகா இருக்க உங்கள பாராட்டு என்ற அம்பை எய்தி வீழ்த்த நினைத்த சில பேரை எனக்கும் தெரியும். ஆனா நீங்க மத்தவங்க பாராட்டெலாம் எனக்கு எதுக்கு ? எனக்கு நான் போதும் என்று இத்தனை நாளும் உங்கள மகிழ்ச்சியா வச்சுக்கிட்டு என்னையும் பாத்துக்குறீங்க என்றபடி பிரதீப் எனை கட்டி அணைத்துக் கொண்டான்.
என்னைப் பற்றி இவனுக்கு இவ்வளவு புரிதலா !!! என்றபடி நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் சொல்வது எவ்வளவு உண்மை.. மனித மனங்கள் பாராட்டுக்காய் ஏங்கி பாதை மாறுவது தானே சகஜமாய் மாறி வருகிறது.." எனக்கு நானே என் தோழியாய் இருப்பது எவ்வளவு வசதி" என்று எண்ணியபடியே மகனுக்கு பழங்களை நறுக்கினேன்.. பழத் துண்டுகளை கையில் எடுத்துக் கொண்ட பிரதீப் "நான் கூட உங்களை ஃபாலோ பண்ண போறேன்" என்ற போது செல்ல மகனே நானும் உன்ன பாராட்டுறேன் நீயும் உன்னையே பாராட்டிக்கொள்.. என்றபடியே நீயும் இதைக் கேட்டுப் பாரேன் என்று என்னுடைய ஆடியோ ஃபைலை அவனுக்கும் ஷேர் பண்ணினேன்.
(குறுங்கதையை எழுதிய ஷீலா ராஜன் அடிப்படையில் ஒரு ஆசிரியை. கடலூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றியவர். தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் ஆங்கில குழுவில் இடம் பெற்றுள்ளார். 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கான காணொலிகளில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். திருவண்ணாமலை ரத்னா செந்தில்குமார் தலைமையிலான தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம் நடத்திய புறநானூறு உலக சாதனையிலும் திருக்குறளுக்கான கதை எழுதும் உலக சாதனை நிகழ்வில் பங்கேறுள்ளார்)