இவள் தானே நம் தேவதை!
- கவிஞர் க. முருகேஸ்வரி
காதலுக்கு மரியாதை படத்துல வர்ற ஷாலினி எனக்கு ரொம்ப பிடிக்கும்.... அவளுக்கு அவள் அண்ணன்கள் கொடுக்கும் பாதுகாப்பு போலவே ...
எனக்கும்.... என் அண்ணன் தம்பிகள் அண்ணனின் நண்பர்கள் தம்பியின் நண்பர்கள் என எப்போதும் ஆண்கள் பட்டாளம் என்னைச் சுற்றி இருக்கும். நான் ஒருத்தி மட்டும் அவர்களுக்கு எல்லாம் செல்லப்பிள்ளையாக.... அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்.... ஆனால் அரட்டை ஜாலி என்று அவர்களோடு நானும் ஐக்கியமாவேன்...
அவர்களோடு... கிரிக்கெட்...கேரம்....கிட்டி....விளையாடுவது.... கிரிக்கெட் பார்த்து ரசிப்பது.....என்னை தேவதையாகக் கொண்டாடுவார்கள்...படம் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.... அனுமதியே கிடைக்காது...அப்படி கிடைத்தால்...என் பின்னால் ஒரு வரிசை முழுவதும் என் அண்ணன்மார்கள்..
படிக்கும் போதும் சரி வேலைக்கு செல்லும் போதும் சரி என்னை பத்திரமாக கொண்டு வந்து பேருந்து ஏற்றுவார்கள் .... மாலை பேருந்து வரும்முன் தயாராக இருப்பார்கள். நான் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள்..... கொஞ்சம் போர் தான்... இருந்தாலும் கெத்து....
திருவிழாவில் கரகாட்டம் ஆடலும் பாடலும் நாடகம் என எங்கள் ஊரில் நிகழ்ச்சிகள் களைகட்டும்.... அதற்கும் அனுமதி கிடைக்காது.... பெண் பிள்ளைகள் அங்கெல்லாம் போகக்கூடாது... தேவையில்லாத பிரச்சினை வரும் என்று என் அண்ணன் சொல்வான். அண்ணுக்குத் தெரியாமல் ஒரு நாள் அம்மாவுடன் ஆடலும் பாடலும் பார்க்க சென்று சிறிது நேரம் பார்த்து விட்டு வந்து விட்டோம்.... என் அண்ணனின் நண்பர்கள் கூறிய பின்னர் தான் தெரிந்தது... என் அண்ணனை ஏமாற்ற முடியாது என்று... வழக்கம்போல் அண்ணன் பட்டாளம் என் பின்னே ஆஜராம்.. என் தோழிகளில் சிலர் உன் அண்ணன் போல எனக்கு அண்ணன் இல்லையே என்று வருத்தப்பட்டுள்ளார்கள்.....
இதில் இன்னொரு அழகான விஷயம் என்னவென்றால் என் அண்ணன் ஹீரோ போல அழகாக இருப்பான். என் அண்ணனைப் பார்ப்பதற்கு சிலர் என்னிடம் நட்பு பாராட்டுவார்கள்.... அது புரியாமல் நானும் நம்பி வீட்டுக்கு அழைத்து சென்றதுண்டு.... அண்ணன் தங்கை பாசத்தைப் பற்றி ஒரு கவிதை கவிஞர் நா.முத்துக்குமாருடையது....முதிர்ந்த மழை நாளில் என்று ஆரம்பிக்கும்.... அண்ணன் தங்கை உறவின் அழகியலை அற்புதமாகச் சொல்லும் கவிதை....
என் இரண்டு தம்பிகளை விட என் அண்ணனுடான உறவு இன்னும் அழகு...
நான் ஒரு பள்ளியில் வேலை பார்க்கும் பொழுது பள்ளி சுற்றுலாவிற்கு மாணவர்களோடு ஆசிரியர்களும் ஒரு பேருந்தில் என் ஊருக்கு அழைத்துச் சென்றேன்.... அந்த வழியாக சுற்றுலா சென்றதால் அன்று இரவு என் வீட்டில் தங்க வைக்கலாம் என்று.... பேருந்து என் ஊரின் உள்ளே நுழைந்ததும் ஒவ்வொரு இடத்திலும் என் அண்ணனின் நண்பர்கள் பேருந்தை நிறுத்தி நிறுத்தி நான்கு பேர் ஐந்து பேர் என்று ஏறுவதைப் பார்த்து என்னுடன் வந்த ஆசிரியர்கள் மலைத்துப் போனார்கள்....
அவர்களை நன்றாக கவனித்து மறுநாள் அனுப்பி வைக்கும் பொழுது பிரமிப்புடன் சென்றார்கள்....என் அண்ணனும் பெற்றோர்களும் எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. என்னைப் பெண் பார்க்க வரும் பொழுது என் அண்ணனின் நண்பர்கள் அடிக்கும் கேலியும் கிண்டல்களும் இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது .... ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஒரு குறை சொல்லி அனுப்புவார்கள்.
திருமணம் முடியும் வரை என்னை அக்கறையோடு பாதுகாத்து வளர்த்தனர் என் அண்ணனும் தம்பிகளும்.... எனக்கு உடல்நிலை சரியில்லாத போது என் அண்ணன் அவன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியது...மறக்க முடியாதது.... தற்போது என் இரண்டு குழந்தைகளும் வளர்ந்து ஆளாகி விட்டனர்.ஆனால் இப்பொழுதும் என் அண்ணனுக்கு நான் குழந்தை தான்... நான் அழுதால் தாங்க மாட்டான்....
நாம் நடந்து செல்லும் போது நம்மை யாரும் திரும்பி பார்க்கக்கூடாது.... நம் உடை அப்படித்தான் இருக்க வேண்டும் என்பான். காட்டன் மட்டுமே எளிமையான அழகு என்று என் மனதில் ஆழப் பதிய வைத்து விட்டான். என் அண்ணனுக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும் என்னை விதவிதமாக புகைப்படம் எடுப்பான்..
இதுவரை நான் கண்மை இட்டதில்லை... அலங்காரம் செய்து கொண்டதில்லை.. ஏனென்றால் என் அண்ணனுக்கு அது பிடிக்காது....நாம் நடந்து செல்லும் போது நம்மை யாரும் திரும்பி பார்க்கக்கூடாது.... நம் உடை அப்படித்தான் இருக்க வேண்டும் என்பான்.எளிமையான காட்டன் மட்டுமே இயல்பான அழகு என்று என் மனதில் ஆழப் பதிய வைத்து விட்டான்
என் செல்லத் தம்பியும் என் அண்ணனைப் போலவே.... !
காலம் ஓடி விட்டது.... நினைவுகளை மட்டுமே அசை போட்டுக் கொள்கிறேன்... இனிமையான அனுபவங்கள் என்னுள்ளே இருப்பதால் நான் கொடுத்த வைத்தவள்.... அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே அண்ணன்களின் கைகளிலே தீபமும் நான் தானே!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).