விமானப்படைக்கு 114 ரஃபேல் போர் விமானங்கள்.. ரூ. 3.25 லட்சம் கோடியில் மெகா ஒப்பந்தம்!
டெல்லி: இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, பிரான்ஸ் நாட்டின் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பிரம்மாண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரம் ஒப்புதல் அளிக்க உள்ளது.
சுமார் ரூ. 3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாக அமையவுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ், 100 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வலுசேர்ப்பதுடன், உயர்தர போர் விமானத் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு கிடைக்கவும் வழிவகுக்கும்.
ஏற்கனவே விமானப்படையிடம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ள நிலையில், கடற்படைக்காக 26 எம் ரக ரஃபேல் விமானங்களை ரூ. 63,000 கோடி செலவில் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவை ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் நிலைநிறுத்தப்படும்.
பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இணைந்து ஹைதராபாத்தில் அதிநவீன உற்பத்தி நிலையத்தை அமைக்கவுள்ளன. இதற்கான முதல் பாகங்கள் 2028-ஆம் ஆண்டு வாக்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக ஆபத்தான போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரஃபேல், வான்வழித் தாக்குதல் மற்றும் துல்லியமான இலக்குகளை அழிப்பதில் வல்லமை பெற்றது.
இதில் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட SCALP ஏவுகணை, நீண்ட தூரம் சென்று வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் மெட்டியார் என்ற ஏவுகணை, ஸ்பெக்ட்ரா தொழில்நுட்பம் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
இந்திய விமானப்படையின் வசம் ஏற்கனவே உள்ள ரஃபேல் விமானங்கள், கடந்த ஆண்டு நடந்த ராணுவ நடவடிக்கைகளிலும், லடாக் எல்லைப் பகுதிகளிலும் திறம்படச் செயல்பட்டுத் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளன.
இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம், பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே ரஃபேல் விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்.