திருட்டு நகையை மீட்க முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

Meenakshi
Nov 25, 2025,05:03 PM IST

மதுரை: நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என்றால், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை, சட்டப்படி அரசு வழங்க வேண்டும்  என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், நாடு முழுவதும் அதிகளவில் திருட்டு சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. கஷ்டப்பட்டு சிறுகசிறுக சேர்த்து வைத்து வாங்கிய தங்க நகையை திருடர்களிடம் இருந்து பாதுகாப்பது தற்போது மக்களுக்கு பெரும்பாடாகவே உள்ளது என்று சொல்லலாம்.




இந்த நிலையில், திருடு போன நகையை பல ஆண்டுகளாகியும் போலீசார் கண்டுபிடித்து கொடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்டம், எஸ்.எஸ் காலணியை சேர்ந்த சுஜா சங்கரி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.  


அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது வீட்டில் இருந்து சுமார் 75 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. சுமார் 9 ஆண்டுகள் ஆகியும் போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். 


இதனையடுத்து, இந்த வழக்கு இன்று (25.11.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என்றால், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை, சட்டப்படி அரசு வழங்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை விசாரணை நடத்தி கண்டுபிடிக்க திறமை மிக்க அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்பு பிரிவை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும். 


அதேபோல, 5 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் உள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறை ADSP தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார்.