சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்

Su.tha Arivalagan
Jan 14, 2026,12:57 PM IST

ஐதராபாத் : சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் பழைய காலத்து சூப்பர் ஹிட் பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்துவது ஒரு டிரெண்டாக மாறியுள்ளது. ஆனால், இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு எதிராக மிகவும் கண்டிப்பான நிலையை எடுத்து வருகிறார்.


இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மன சங்கர வர பிரசாத் காரு' (Mana Shankara Vara Prasad Garu) திரைப்படத்தில், 'தளபதி' படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் புகழ்பெற்ற 'சுந்தரி' பாடல் ஒரு குறிப்பிட்ட காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், இளையராஜா இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பாரோ என்ற அச்சம் எழுந்தது. ஏற்கனவே சில படங்களுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.




இந்த விவகாரம் குறித்து இயக்குனர் அனில் ரவிபுடி தற்போது மௌனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், படத்தின் தயாரிப்புக் குழு ஏற்கனவே இளையராஜாவை அணுகி, அந்தப் பாடலைப் பயன்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற விஷயங்களில் ஒரு முறையான நடைமுறை இருப்பதாகவும், எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க தாங்கள் அதை சரியாகப் பின்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.


இளையராஜா தங்கள் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியதால், இதில் சட்ட ரீதியான சிக்கலோ அல்லது காப்புரிமை (Copyright) பிரச்சனைகளோ எழ வாய்ப்பில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். எனவே, சிரஞ்சீவியின் இந்தப் படத்திற்கு இளையராஜா தரப்பில் இருந்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.