கோயம்புத்தூரில் நடைபெற இருந்த.. இசைஞானி இளையராஜா இசை கச்சேரி..ஜுன் 7ம் தேதி ஒத்திவைப்பு..!

Manjula Devi
May 13, 2025,04:57 PM IST

கோயம்புத்தூர்:  என்னுடைய இசைக்கச்சேரி ஜூன் 7-ம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு இருக்கும் பதட்டமான சூழ்நிலையில் இசை நிகழ்ச்சி வைத்தால் நன்றாக இருக்காது என  இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.


 ‌அண்மையில் இளையராஜா தனது முதல்  சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றி வரலாறு படைத்தார். இதற்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தன. இதனையடுத்து நாடு முழுவதும் இசை கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்விப்பேன் என தெரிவித்திருந்தார். அதன்படி, சமீபத்தில் திருநெல்வேலியில் இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தினார். இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜாவின் இசை மழையில் நனைந்தனர்.




அந்த வகையில்  கோவை புதூரில் உள்ள ஜி ஸ்கொயர் 7 ஹில்ஸ் மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி மே 17ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தேதி மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில், இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவிவரும் பதற்றம் காரணமாக இசை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு மே 31ஆம் தேதி நடைபெறும் எனவும், இந்த நிகழ்ச்சிக்காக ஏற்கனவே பெற்றுள்ள டிக்கெட்டுகளை பயன்படுத்தி ரசிகர்கள் பங்கேற்கலாம் எனவும்  அறிவிப்பு வெளியானது.


இந்த நிலையில் தற்போது தனது இசை கச்சேரி மீண்டும் தள்ளிப் போவதாக இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவைப்புதூரில் வரும் 17ஆம் தேதி நடைபெற இருந்த என்னுடைய இசைக்கச்சேரி வரும் ஜூன் 7ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு இருக்கும் பதற்றமான சூழ்நிலையில் இசை நிகழ்ச்சியை வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.