இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!

Su.tha Arivalagan
May 18, 2026,03:16 PM IST

சென்னை: இசைஞானி இளையராஜா தனது 1540வது படமாக கார்த்திக் சுப்பராஜின் 10வது படத்திற்கு  இசையமைக்கிறார்.



தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ், தனது 10-வது திரைப்படத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியை அமைத்துள்ளார். ‘இசைஞானி’ இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், "A Dream.... A Blessing..." என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். கார்த்திக் சுப்பராஜுக்கு இது 10-வது படம் என்றால், இசைஞானி இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் இது 1540-வது திரைப்படமாகும். 




இந்த அபூர்வ கூட்டணியை வைத்து #Dream10Blessing1540 என்ற ஹேஷ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய முந்தைய 9 படங்களில், 'பேட்ட' (அனிருத்) தவிர மற்ற 8 படங்களுக்கும் சந்தோஷ் நாரயணனே இசையமைத்திருந்தார். இருப்பினும், கார்த்திக் சுப்பராஜின் ஒவ்வொரு படத்திலும் இளையராஜாவின் பாடல்களோ அல்லது அவரது பின்னணி இசையோ ஏதோ ஒரு முக்கியக் காட்சியில் இடம்பெறுவது வழக்கம். அந்த அளவிற்கு இளையராஜாவின் தீவிர ரசிகரான கார்த்திக், தற்போது முதன்முறையாக தனது முழு படத்திற்கும் அவரை இசையமைக்க வைத்துள்ளார்.


ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூரின் 'சீக்யா என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தின் தலைப்பு மற்றும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு இளையராஜா ஒரு இளம் தலைமுறை முன்னணி இயக்குநருடன் இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.