ஒரே தூக்கு.. இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் அசத்திய அகஸ்தீஸ்வரம் ஆசிரியர்!
கிருஷ்ணன்புதூர், கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூரில் நடந்த இளவட்டக் கல் போட்டியில் பலரும் கலந்து கொண்டு கல்லைத் தூக்கி அசத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்குதல் தற்போது இளம் தலைமுறையினர் இடையே அதிகரித்து வருவது. இதுதொடர்பான போட்டிகளும் நடைபெற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. பெண்களும் கூட இதை தூக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொதுவாக இது போன்ற போட்டிகள் ஊர் திருவிழாக்கள் அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூரில் மிஸ்டர் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற கண்ணன் மாஸ்டர் மூலமாக ஒரு போட்டி நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் இந்தப் போட்டியை தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் அகஸ்தீஸ்வரம் அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கவிஞர் சு. நாகராஜனும் கலந்து கொண்டு இளவட்டக் கல்லைத் தூக்கி
அசத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மாவட்ட அளவிலான முதலாவது இளவட்டக் கல் தூக்கும் போட்டி இது என்பதால் பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.