வங்க கடலில் மே 27ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!

Manjula Devi
May 22, 2025,05:26 PM IST

சென்னை: ஏற்கனவே அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், வங்க கடலில் வரும் 27ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



தெற்கு கொங்கன்- கோவா கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நாளை மாலை வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதன் காரணமாக தமிழகம், கேரளா, ஆந்திராவுக்கு இன்று முதல் ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.




இதற்கிடையே மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த  மேலடுக்கு சுழற்சி வருகின்ற மே 27ஆம் தேதி குறைந்த அழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் எனவும், இது அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைய கூடும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆனால் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்க இருப்பதால் அந்த சமயத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகம்,  கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.