இம்ரான்கான் இறந்து விட்டதாக வதந்தி.. நலமாக இருப்பதாக சிறை நிர்வாகம் அறிவிப்பு.. தொடரும் போராட்டம்

Su.tha Arivalagan
Nov 27, 2025,04:02 PM IST
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த மர்மம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர் இறந்து விட்டதாகவும், அவரது உடல்நிலை குறித்தும் பல வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது மூன்று சகோதரிகளை அடீலா சிறை அதிகாரிகள் மீண்டும் சந்திக்க அனுமதிக்கவில்லை.  அதேசமயம், இம்ரான் கான் நலமாக இருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) தலைவர் இம்ரான் கான், 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வாரக் கணக்கில் பொதுவெளியில் காணப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக குடும்ப மற்றும் சட்டரீதியான சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தொடர்பு தடை, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) மற்றும் மனித உரிமை குழுக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 



இம்ரான் கானின் மூன்று சகோதரிகளான அலிமா கான், நூரீன் நியாஸி மற்றும் டாக்டர் உஸ்மா கான் ஆகியோர், அவரது கட்சி ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரை சந்திக்க பலமுறை முயன்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். சந்திப்பு உரிமைகளுக்காக சிறைக்கு வெளியே அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டபோது, ​​காவல்துறையினர் அவர்களை வன்முறையாக கைது செய்ததாக கூறப்படுகிறது. ஒரு சகோதரி தனது முடியை பிடித்து இழுத்ததாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்தை "அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்" என்று சொல்லி, சகோதரிகள் பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸிடம் முறையான புகார் அளித்துள்ளனர். இந்த வன்முறை குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2023 ம் ஆண்டு முதல் இம்ரான் கான் அடீலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 2025, வாரத்திற்கு இருமுறை அவரை சந்திக்க அனுமதி உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இருந்தபோதிலும், சகோதரிகள் மற்றும் சட்டக் குழுவினருக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. நவம்பர் 2025 சகோதரிகள் மற்றும் PTI ஆதரவாளர்கள் சிறைக்குள் செல்ல முயன்றனர். ஆனால் சோதனைச் சாவடிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இது இம்ரான் கானின் உடல் நிலை குறித்தும், அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது குறித்தும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 

கைய்பர்-பக்துன்க்வா முதலமைச்சர் சோஹைல் ஆஃப்ரிடி கூட இம்ரான் கானை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.  சிறையில் அவரை சந்திக்க ஏழு முறை தொடர்ச்சியாக முயன்றார், ஆனால் சிறை அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை.  இதற்கிடையில் பாகிஸ்தானின் அடீலா சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இறந்துவிட்டதாக பரவிய வதந்திகளை சிறைத்துறை மறுத்துள்ளது. சிறைக்கு வெளியே பெரும் போராட்டங்கள் வெடித்ததால்,  சிறை நிர்வாகம் முன்னாள் பிரதமர் சிறைக்குள்ளேயே இருப்பதாகவும், "நல்ல ஆரோக்கியத்துடன்" இருப்பதாகவும் கூறியுள்ளது.