சுதந்திரம் காப்போம்!

Su.tha Arivalagan
Aug 15, 2025,01:14 PM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


ஆம் ... நாம் சுதந்திரம் பெற்றோம். 

அன்று சிந்திய இரத்தத்தால்   பெற்றோம்.

அடிமைப்பட்ட நம் பாரதத்தை மீட்டெடுத்தோம் .

அன்னிய ஆங்கிலேய ஆட்சியிடம் இருந்து.




பலரின் தியாகத்தால் பெற்ற சுதந்திரம்.

புரிந்துணர்ந்து  அதை மாண்புடன் காப்போம்.

பாரத மக்கள்  மகிழ்வுடன் வாழ ,

போராடி பெற்ற சுதந்திரத்தை காப்போம்.


எத்தனை ஜாதிகள் ?  எத்தனை மதங்கள்? 

எத்தனை மொழிகள்? எத்தனை இனங்கள்.?

எத்தனை வேற்றுமை  இங்கு இருப்பினும் ,

ஏற்றமிகு ஒற்றுமையினை எங்கும் காண்போம். 


சமூக ஏற்றத்தாழ்வுகள் அறவே  நீக்குவோம் .

சாதி மத பேதங்கள்  முற்றும் ஒழிப்போம் .

ஆண்பெண் உயர்வு தாழ்வு அடியோடு அகற்றுவோம் .

அடிமைத்தனம் அகன்று அமைதியாய் வாழ்வோம். 


பாரத நாட்டின் இயற்கை வளம்  காப்போம். 

பசுமை பாரதம் பண்போடு படைப்போம்.

இரசாயனம் தவிர்த்து மண்னுரிமை காப்போம் .

இளகுநெகிழி தவிர்த்து, மண்வளம் காப்போம்.


ஆணவக் படுகொலை அகற்றி ஆனந்தமாய் வாழ்வோம்.

தீண்டாமை ஒழித்து தீரா காதலுடன் வாழ்வோம்.

விவசாயி நலம் காத்து வீறுநடை போடுவோம்.

பெற்ற சுதந்திரத்தை பெருமையுடன் காப்போம்.



கலையின் சுதந்திர ஹைக்கூ கவிதைகள்




எனது உயிர் மூச்சாய்....

சுதந்திர காற்று .

சுகமாய் சுவாசிக்கிறேன்.


சிறகு  முளைத்த பறவை .

எல்லைகளற்ற  வானம்.

சுதந்திரக் காற்றில் பறப்பதை 

யாராலும் தடுக்க முடியாது.


மூச்சைவிட்ட தியாகிகளின் 

சுவாசம் நின்று போனது ..! எதனால்.?

சுதந்திரக் காற்று கிடைக்காததால் .


மூவர்ணம் தாங்கி ,

தியாகம், அமைதி, செழிப்பு  ஓங்கி ,

அசோகச் சக்கரத்தில் சுழன்று ,

விடுதலைக் காற்று 

சுதந்திர தேவியாய் பவனி வருகிறாள்.


பல நூற்றாண்டாய் ...

பாரம் சுமக்கிறாள் பெண்.

நாடு விடுதலை பெற்றது தெரியாமல் .


ஆண்டாண்டு காலமாய் பெண்ணை ...

அடக்கி ஆள்கிறான் ஆண்.

நம் நாட்டு மக்கள் சுதந்திரம்

பெற்று விட்டதை  மறந்து.


சுதந்திரத்தைப் பற்றி..

மாணவனை இரண்டு நிமிடங்கள் 

பேசச் சொல்கிறார் ஆசிரியர்.

கையில் பிரம்புடன்.


( தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்)


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).