முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம். திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு அமைக்கப்பட்டதும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தத்தமது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். தற்பொழுது கூட்டணி குறித்தும், தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் கட்சினர்.
அந்த வகையில், சென்னை அறிவாலயத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு சந்தித்தது. அதன்பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சி தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இன்று கிரிஷ் சோடங்கர் தலைமையில் இந்தக் குழு முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட பின், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பின்னர் தெரிவிக்கிறோம். கிழக்கா, மேற்கா, வடக்கா, தெற்கா என்று பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைபாட்டில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.