தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
Jan 29, 2026,05:59 PM IST
டில்லி : தமிழகத்தில் விடுபட்ட வாக்காளர்களைப் பட்டியலில் இணைக்கும் பணிகளில் ஒரு முக்கியத் திருப்பமாக, விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பம் அளித்தவர்கள் குறித்த பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் எஸ்ஐஆர் பணிகளில் பல தகுதியுள்ள நபர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யும் வகையில் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. திமுக.,வின் கோரிக்கையை ஏற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோருக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைவாகவும் செம்மையாகவும் முடிக்கத் தேவையான கூடுதல் அலுவலர்களைத் தமிழக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்குச் சிரமம் இன்றி இந்தப் பதிவுப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள இந்த 10 நாள் அவகாசத்தைப் பயன்படுத்தி, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் (18 வயது பூர்த்தியானவர்கள்) தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலமாகவோ அல்லது அந்தந்தப் பகுதியில் உள்ள சிறப்பு முகாம்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.