மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

Su.tha Arivalagan
Jun 08, 2026,05:06 PM IST

புதுடெல்லி: மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் கடுமையான ராணுவ மோதல்கள் வெடித்துள்ளதால், போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் மற்றும் அங்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்தியக் குடிமக்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவை இணைந்து அவசரப் பயண ஆலோசனையையும் முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளன.


இந்தியர்கள் யாரும் தற்போதையச் சூழலில் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு ஈரானில் தற்போது தங்கியிருக்கும் இந்தியக் குடிமக்கள் அனைவரும், அங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் உள்ள இந்தியர்கள் அங்கிருக்கும் இந்தியத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், தங்களின் பாதுகாப்பு விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிழல் யுத்தமும், ஏவுகணைத் தாக்குதல்களும் அவ்வப்போது நடந்து வந்தன. தற்போது இரு நாடுகளும் மீண்டும் ஒருவரையொருவர் நேரடியாகத் தாக்கத் தொடங்கியுள்ளதால், ஒட்டுமொத்த மேற்கு ஆசியப் பிராந்தியத்திலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இரு தரப்பிலும் ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ஆயுதங்களைக் கொண்டு பரஸ்பரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்குவதே தங்களின் முதல் முன்னுரிமை என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேற்கு ஆசியாவில் நிலவி வரும் இந்த திடீர் போர் பதற்றம், அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. நிலைமையைக் கூர்ந்து கவனித்து வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தேவைப்பட்டால் இந்தியர்களைப் பத்திரமாக மீட்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் ஆலோசித்து வருகிறது.