61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி

Su.tha Arivalagan
Feb 15, 2026,10:23 PM IST
கொழும்பு: கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி வென்றது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை 17 முறை சந்தித்துள்ள இந்தியா இன்றைய போட்டியுடன் 16வது முறையாக வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ஒரு முறை மட்டுமே நம்மை வென்றுள்ளது.

முன்னதாக, இந்திய அணி முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மாவை இழந்தாலும் கூட, இஷான் கிஷன் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார்.  இஷான் கிஷன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா தன் பங்குக்கு 24 பந்துகளில் 25 ரன்கள் குவிக்க, கேப்டன் சூர்ய குமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்களை விளாசினார்.

ஹர்டிக் பாண்ட்யா சிக்ஸருக்கு அடிக்கப் போய் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி விட்டார். கடைசி ஓவர்களில் ஷிவம் துபே அதிரடி  காட்டினார். 17 பந்துகளில் 27 ரன்களை விளாசினார். ரிங்கு சிங் தன் பங்குக்கு 3 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க இந்தியா கடை.சி கட்ட மந்த நிலையிலிருந்து சற்று மீண்டு 175 ரன்களை எடுக்க முடிந்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை இந்தியா எடுத்தது.





இதையடுத்து விளையாட வந்த பாகிஸ்தான் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளைப் பறி கொடுத்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து இந்தியா தனது அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தானை திணறடித்தது. இறுதியில், 18 ஓவர்களில் அனைத்து  விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் 114 ரன்களை மட்டுமே எடுத்து கவிழ்ந்தது.

முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா டாஸ் வென்று தனது அணி முதலில் பந்து வீச்சை மேற்கொள்ளும் என்று அறிவித்தார்.  இந்திய அணியில் இரு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாடினார்.

இன்றைய வெற்றியின் மூலம் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.  ஏ பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு அடுத்து எந்த அணி தகுதி பெறும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை குலுக்கிக் கொள்ளாத கேப்டன்கள்


பரபரப்பான இந்தப் போட்டியில் டாஸின் போது இரு நாட்டு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பையின் போது ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக இந்தியா கடைபிடித்து வரும் கைகுலுக்க வேண்டாம் என்ற கொள்கையை இப்போட்டியிலும் இந்தியா தொடர்ந்துள்ளது.


இந்திய அணி விவரம்:

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (வி.கீ), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.