தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

Su.tha Arivalagan
Mar 08, 2026,10:53 PM IST
அகமதாபாத்: தோல்விகள் எப்போதும் பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.. ஆனால் வெற்றிகள்தான் வரலாற்றை எழுதும், வரலாறு படைக்கும்.. அப்படி ஒரு வரலாற்றைத்தான் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் இன்று மறக்க முடியாத நிகழ்வு. இந்தியாவுக்காக மீண்டும் ஒரு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி. 

எந்த மைதானத்தில் ஒட்டு மொத்த தேசமும் பெரும் ஏமாற்றத்துக்குள்ளான ஒரு தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்ததோ, அதே மைதானத்தில் இன்று நியூசிலாந்துக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் புயலாக மாறி பழி தீர்த்து கோப்பையைப் பெற்று வரலாறு படைத்துள்ளது இந்தியா.

கபில்  தேவ், எம்.எஸ். தோனி, ரோஹித் சர்மா ஆகிய ஜாம்பவான்களின் வரிசையில் இந்த கோப்பையின் மூலம் சூர்யகுமார் யாதவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.



கபில் தேவ் 1983ம் ஆண்டு முதல்முறையாக உலகிற்கு இந்தியாவின் பலத்தைக் காட்டியவர். அப்போது இந்தியா ஒரு நாள் உலகக் கோப்பை சாம்பியனாகி இந்தியாவை உலக அரங்கில் ஒய்யாரமாக உட்கார வைத்தது.

அவருக்குப் பிறகு உலகக் கோப்பை என்பது நமக்கு பெரும் கனவாக மாறியிருந்தது. இதை தீர்த்து வைத்தவர் எம்.எஸ். தோனி. 2007, 2011, 2013 என  மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையோடு, 2011ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தார் தோனி. அதேபோல 2007ல் இந்தியாவின் முதல் டி20 உலகக் கோப்பையையும் தோனிதான் வென்று கொடுத்தார். 

ரோஹித் சர்மா 2024ல் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்று 11 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தவர். இந்த வரிசையில் இப்போது சூர்ய குமார் யாதவ் இணைந்துள்ளார். 

சண்டை செய்வதில் இந்தியா எப்போதும் சளைத்தது கிடையாது. தோல்விகள் பல நம்மைச் சூழ்ந்திருந்தாலும் தொடர் முயற்சிகளை இந்தியா எப்போதுமே கைவிட்டது கிடையாது. அந்த தொடர் முயற்சிகளின் விளைவாக கிடைத்துள்ள இந்த வெற்றிதான் இந்தியாவை வரலாற்றில் இடம் பெற வைத்துள்ளது.