இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்

Su.tha Arivalagan
Oct 30, 2025,05:19 PM IST

சென்னை: தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது. இன்று, அடிப்படை மட்டத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். மேலும், 23க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன என்று ஐ.நா. அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையத்தின் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி. வில்சன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிநிறுவல் ஆணையம்  என்பது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமைதி நிறுவல் ஆணையத்தின் தூதர் மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் நிலைப்பாட்டு அறிக்கையின் கீழ், எம்.பி. பி.வில்சன் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து:




1. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325ன் 25ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி இன்றைய நிகழ்வை ஒருங்கிணைத்ததற்காக, அமைதிநிறுவல் ஆணையத்தின் தலைமை ஜெர்மனிக்கு இந்தியா தனது பாராட்டுகளை தெரிவிக்கின்றது.  

பெண்கள் சமத்துவத்திற்காக நமீபியா அமைச்சரும், ஐ.நா. மகளிர் அமைப்பின் நிறைவேற்று இயக்குநரும், மற்றும் மற்ற உரையாளர்களும் தங்களது ஆழமான கருத்துகளையும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறோம். 

 

2. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அமைதியை உருவாக்குவதற்கும்  நிலைநிறுத்துவதற்கும் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறது. அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவல் மீதான எங்கள் அர்ப்பணிப்பு, தேசிய உரிமை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு(WPS) நோக்கங்களின் கொள்கைகளுடன் இணைந்துள்ளது.


3. இந்தியாவின் அமைதிக்காப்பு பாரம்பரியத்தை தனித்துவமாக ஆக்கும் அம்சம் எங்கள் பங்களிப்பின் அளவில் மட்டும் இல்லை, நிலைத்த அமைதிக்கான இன்றியமையாத செயற்பாட்டாளர்களாக பெண்களை முன்கூட்டியே அடையாளம் கண்டது என்பதிலும் இருக்கிறது.   பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325 பிறக்கும்முன்பே, 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர். இது, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்ற முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகவும் பதிவாகிறது. இது ஒரு குறியீட்டு நடவடிக்கை மட்டுமல்ல; மாறாக, பெண்களின் பார்வை, திறன்கள், மற்றும் அவர்களின் பங்கு பயனுள்ள அமைதிக்காப்பு மற்றும் அமைதி நிறுவலிற்கு அத்தியாவசியமானவை என்பதைக் கண்கூடாக அங்கீகரிக்கிறது. 

 

4. 2007 ஆம் ஆண்டு, இந்தியா ஐ.நா.வின் முதல் முழு பெண்கள் கொண்ட காவல் படை பிரிவை (Formed Police Unit) லைபீரியாவிற்கு அனுப்பியது. இந்த முன்னோடியான முயற்சி, அந்நாட்டின் உள்ளூர் பெண்களை தங்கள் தேசிய காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் சேர ஊக்குவித்தது. இன்று, இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள் காங்கோ ஜனநாயகக் குடியரசு, அப்யேய் மற்றும் தென் சூடான் ஆகிய இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சமூகங்களுடன் நம்பிக்கையை உருவாக்குவதிலும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். 

 

5. இவ்வாறான பணியமர்வுகளின் மூலம், அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவலில் பெண்கள் வழங்கும் நேர்மையான பங்களிப்பு மற்றும் தாக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள், சமூகங்களில் நம்பிக்கையை உருவாக்கி, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை  அளிக்கின்றனர். மிக முக்கியமாக, அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்ளவும், அமைதிக்கான வழிமுறைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தேவைகள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கவும் உதவுகின்றனர். அத்துடன், மோதல் நிலப்பரப்புகளில் உள்ள பெண்களுக்கு, அவர்களும் தலைவர்களாகவும், அமைதி நிறுவர்களாகவும் ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர்.  

 

6. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது. இன்று, அடிப்படை மட்டத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். மேலும், 23க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. இது, சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த ஆட்சி ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் அம்சங்கள் என்பதை வலியுறுத்துகிறது.



7. இந்தியா, பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளில், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலிருந்து வரும் அமைதிப்படைப் பணியாளர்களுக்காக, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. புது டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு மையம் (Centre for United Nations Peacekeeping), இன்று பாலின உணர்வுமிக்க பயிற்சிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது. அது, பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக முக்கிய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு இயக்கத்திட்டமிடல், பொதுமக்கள் பாதுகாப்பு, பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைத் தடுப்பு, பாலின உணர்வுமிக்க தலைமைத்துவம் போன்ற துறைகளில் அத்தியாவசிய பயிற்சிகளை வழங்குகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில், இந்தியா உலக தெற்கு நாடுகளிலிருந்து பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக நடத்தப்பட்ட முதல் வகையான சர்வதேச மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தது. 

 

8. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது. இந்தியா தனது கூட்டு நாடுகளுடன், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலுள்ளவர்களுடன், தனது அறிவு, பயிற்சி, மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு, பொதுவான சவால்களுக்கு கூட்டாக தீர்வுகளை உருவாக்குவதில் தயாராக உள்ளது.