இந்தியா மட்டும் ஜெயிச்சா பத்தாது.. தெ.ஆப்பிரிக்காவும் வெல்ல வேண்டும்.. எப்படி சிக்கிருக்கோம் பாருங்க
டெல்லி: டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் அரை இறுதிச் சுற்றுக்கு இந்தியா நுழைய மிகக் கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்திய அணியின் ரன் ரேட் (NRR) -3.800 ஆக மிகவும் பின்தங்கியுள்ளது. இதனால் அரையிறுதிக்குச் செல்ல இந்தியாவுக்குக் கீழ்க்கண்ட முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.
இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான போட்டியில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் போட்டியிலும் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இது மட்டும் போதாது. தென்னாப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் அது இந்தியாவுக்குச் சாதகமாக அமையும். மாறாக மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றால் இந்தியாவுக்குச் சிக்கல்தான்.
தென்னாப்பிரிக்கா தனது மீதமுள்ள போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேயை வீழ்த்த வேண்டும். அதே சமயம், இந்தியா தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள்) வெற்றி பெற வேண்டும்.
இப்படி நடந்தால், தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும்.
ஒருவேளை மேற்கிந்தியத் தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்தால், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலைக்கு வந்து விடும்.
இந்தச் சூழலில், ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்குச் செல்லும். அப்படி வரும்போது, இந்தியாவின் ரன் ரேட் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால், அதற்கு சிக்கல் காத்துள்ளது. எனவே இதற்கெல்லாம் வழி இல்லாமல் போக வேண்டும் என்றால், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
ரொம்ப சுருக்கமா சொல்லணும்னா, இந்தியா அரையிறுதிக்குச் செல்ல வெறும் அது வென்றால் மட்டும் போதாது. மாறாக, தென்னாப்பிரிக்கா அணி மேற்கிந்தியத் தீவுகளைத் தோற்கடிக்க வேண்டும். இந்த இக்கட்டான நிலையில்தான் தனது அடுத்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இன்று இந்தியா சந்திக்கவுள்ளது.