ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
- கலைவாணி கோபால்
டெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி பீச்சில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் யூதர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போண்டி பீச் ஹனுக்கா விழாவின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை மகன் இணைந்து நடத்திய தீவிரவாதத் தாக்குதல் யூத இனத்தவர்களை குறி வைத்து நடந்ததாகும். இதனால் உலகம் முழுவதும் யூதர்கள் வசிக்கும் நாடுகளில் பாதுகாப்பை அதிகரிக்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதல் இது என்பதால் இந்தியாவில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுளஅளன. இந்தியா முழுவதும், குறிப்பாக டெல்லி, மும்பை, மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய பெருநகரங்களில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள், மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் வசிக்கும் யூதர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு நெருக்கடியைத் தர முயற்சிக்கலாம் என்பதால் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. யூதர்களின் வழிபாட்டுத் தலங்கள், இஸ்ரேலிய நிறுவனங்கள், மற்றும் இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள துணைத் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டஉள்ளது. இந்தியாவில் 4000-க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூதர்களும், வேறு நாடுகளிலிருந்து இங்கே குடியேறியவர்களும் அடங்குவர்.
யூதர்களின் வாழ்க்கை பெரும்பாலும் மும்பையை மையமாகக் கொண்டுள்ளது. அங்கே யூதர்களின் புனித ஆலயங்களான சினாக்கோக்குகள், தினப் பள்ளிகள், மற்றும் யூத மதச் சட்டப்படி சமைக்கப்பட்ட கோஷர் உணவு வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 இஸ்ரேலியர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கொடுமையான பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டிப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்திய மக்களின் சார்பில், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரமான வேளையில் ஆஸ்திரேலிய மக்களுக்கு நாங்கள் ஒத்துழைப்புடன் நிற்கிறோம். பயங்கரவாதத்தின் மீது இந்தியாவுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையே உள்ளது, மேலும் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)