Stunning Win for India.. சிதறிய ஜிம்பாப்வே..பிரமாத வெற்றி.. சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா சம்பவம்!

Su.tha Arivalagan
Feb 26, 2026,10:27 PM IST
சென்னை: நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில், வாழ்வா-சாவா என்ற இக்கட்டான நிலையில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட இந்திய அணி, மிரட்டலான பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முன்னதாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. ஆரம்பத்திலிருந்தே இந்திய பேட்டர்கள் அதிரடி காட்டினர். குறிப்பாக, இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை டக்-அவுட் ஆகி விமர்சனங்களுக்கு உள்ளான அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்து தனது பழைய ஃபார்முக்குத் திரும்பினார்.

அவருக்குத் துணையாக சஞ்சு சாம்சன் 24 ரன்களும், இஷான் கிஷன் 38 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். நடுவரிசையில் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் விளாச, கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஜோடி மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களைப் பறக்கவிட்டது. ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், திலக் வர்மா வெறும் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற மெகா ல்கோரை எட்டியது. இது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.




257 ரன்கள் என்ற மலைப்பூட்டும் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தனர். அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி,  அக்ஸார் படேல் ஆகிோர் தங்களது துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகளைச் சரித்தனர். ஜிம்பாப்வே அணியின் பிரையன் பென்னட் மட்டும் தனி ஆளாகப் போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களுக்கு சுருண்டது. தோல்வி உறுதி என்று தெரிந்தும் கூட ஜிம்பாப்வே அணி விடாமல் கடைசி பந்து வரை போராடியது குறிப்பிடத்தக்கது. அதிலும் அந்த அணியின் இளம் வீரர் பிரையன் பிரென்னட் மிகப் பிரமாதமாக விளையாடி 97 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை எடுத்ததால், இன்றைய போட்டியில் ஜெயிக்க முடிந்தது. இல்லாவிட்டால் விளைவு வேறு விதமாக மாறியிருக்கும். ஜிம்பாப்வே பேட்டிங் அப்படித்தான் இன்று சிறப்பாக இருந்தது. 

இந்த அபார வெற்றியின் மூலம் இந்தியா தனது அரையிறுதி வாய்ப்புக்கான போட்டியில் தன்னை தக்கவைத்துக் கொண்டதோடு, ரன் ரேட் அடிப்படையிலும் பலமான நிலைக்கு உயர்ந்துள்ளது. சொந்த மண்ணில் இந்திய வீரர்களின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து மார்ச் 1ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்தியா, கொல்கத்தாவில் சந்திக்கவுள்ளது. அதிலும் இதேபோல அதிரடியாக ஆடி வெற்றி பெற்றால் அரை இறுதிக்குள் நுழையலாம்.

முன்னதாக இன்று நடந்த முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்காவிடம் பரிதாபமான தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.