மிரட்ட வேண்டாம்.. மக்களின் தேவை தான் எங்களுக்கு முக்கியத்துவம்.. நேட்டோவுக்கு இந்தியா பதிலடி

Su.tha Arivalagan
Jul 18, 2025,10:36 AM IST

டெல்லி: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ள நிலையில் அதற்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது. இந்த மாதிரியான மிரட்டல்கள் வேண்டாம். உங்களது இரட்டை நிலைப்பாட்டை எங்களிடம் காட்ட வேண்டாம். எங்களது மக்களின் தேவைதான் எங்களுக்கு முக்கியம் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.


ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. இந்தப் பேரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு உள்ளது. இந்தியா இந்தப் போரில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கும் மேலே போய் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களுடனும் இந்தியா பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது. ஆனாலும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.




ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்கி வருகிறது. அதேபோல ஈரானிடமிருந்தும் எரிபொருள் வாங்கி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது நேட்டோவின் கண்களை உறுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு நேட்டோ அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே இதுகுறித்து கூறுகையில், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளால் கடுமையாக பாதிக்கப்படலாம் என எச்சரித்திருந்தார்.


இதற்கு இந்தியா தற்போது பதிலடி கொடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது வாராந்திர ஊடகச் சந்திப்பின்போது இதுகுறித்துக் கூறுகையில், இந்த விவகாரம் குறித்த அறிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம், மேலும் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எங்கள் மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வது எங்களுக்கு ஒரு முன்னுரிமையாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.


இந்த முயற்சியில், சந்தைகளில் என்ன கிடைக்கிறது மற்றும் தற்போதுள்ள உலகளாவிய சூழ்நிலைகள் எங்களை வழிநடத்துகின்றன. இந்த விவகாரத்தில் எந்தவிதமான இரட்டை வேடத்திற்கும் எதிராக நாங்கள் குறிப்பாக எச்சரிக்க விரும்புகிறோம் என்றார் அவர். நேட்டோ அமைப்பும் சரி அமெரிக்காவும் பல விஷயங்களில் இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்கின்றன. அதைத்தான் இந்தியா இப்படி அழுத்தம் திருத்தமாக சுட்டிக் காட்டியுள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஏற்றுமதிகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்போவதாகவும், மாஸ்கோவுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு நாட்டிற்கும் இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்போவதாகவும் அச்சுறுத்தியது குறித்துக் கேட்டபோது, ஜெய்ஸ்வால், இது தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், வெளிவரும் கருத்துகளையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றார்.


நேட்டோ மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கூட இந்தியா, சீனா, பிரேசில் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு எதிரான போக்கில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத தொடக்கத்தில், டிரம்ப், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்போவதாகவும், அதனுடன் பரஸ்பர வரிகளும் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.