தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
டெல்லி: தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்கும் அதிகாரம் அவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலாய் லாமாவின் நிலைப்பாடு திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.
தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க, கிரண் ரிஜிஜு மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் லல்லன் சிங் ஆகியோர் இந்திய அரசின் பிரதிநிதிகளாக தர்மசாலாவுக்கு சென்றுள்ளனர். இது ஒரு மத நிகழ்வு என்று ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.
தலாய் லாமாவின் அலுவலகம், எதிர்கால தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கடென் போட்ராங் அறக்கட்டளையிடம் இருக்கும் என்று கூறியுள்ளது. இதற்கு பதிலளித்த சீனா, தலாய் லாமாவின் வாரிசு சீன சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 1959ல் திபெத்தில் நடந்த தோல்வியடைந்த கிளர்ச்சிக்குப் பிறகு தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்த நிலையில்தான் தலாய் லாமா வாரிசு குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், தலாய் லாமாவின் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் முக்கியமானது. அவருடைய வாரிசு யார் என்று முடிவு செய்யும் உரிமை தலாய் லாமாவுக்கு மட்டுமே உள்ளது என்று அவர் கூறினார்.
தலாய் லாமா, தனது வாழ்நாளுக்குப் பிறகும் இந்த 600 வருட பழமையான தலாய் லாமா பாரம்பரியம் தொடரும் என்று உறுதிபட கூறியுள்ளார். மேலும் 15-வது தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை கடென் போட்ராங் அறக்கட்டளையிடம் தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே தலாய் லாமாவின் வாரிசு தேர்வு குறித்து தலாய் லாமாவின் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்கால தலாய் லாமாவை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதற்கான வழிமுறைகள் தெளிவாக உள்ளன. செப்டம்பர் 24, 2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் முழு பொறுப்பும் கடென் போட்ராங் அறக்கட்டளையிடம் மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எந்த ஒரு மறுபிறப்பும் பெய்ஜிங்கின் ஒப்புதலைப் பெற்ற பிறகே நடக்க வேண்டும் என்று சீனா கூறுகிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் கூறுகையில், "தலாய் லாமாவின் வாரிசு சீன சட்டங்கள், விதிமுறைகள், மத சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும். மேலும் இந்த தேர்வு சீனாவின் எல்லைக்குள், சீனாவின் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தலாய் லாமா 1959 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறார். சீன ஆட்சிக்கு எதிராக திபெத்தில் நடந்த தோல்வியடைந்த கிளர்ச்சிக்குப் பிறகு அவர் இந்தியாவிற்கு வந்து தஞ்சம் அடைந்தார். சீனா அவரை திபெத்தை பிரிவினை செய்ய நினைக்கும் ஒரு பிரிவினைவாதியாக முத்திரை குத்தினாலும், உலகம் முழுவதும் அவர் அகிம்சை, கருணை மற்றும் திபெத்திய மக்களின் கலாச்சார மற்றும் மத அடையாளத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.
சீனா எதிர்காலத்தில் தனக்கு விருப்பமான ஒரு தலாய் லாமாவை நியமிக்க முயற்சி செய்யலாம் என்று திபெத்தியர்கள் அஞ்சுகிறார்கள். இது நடந்தால், 1950-ல் படைகளை அனுப்பி திபெத்தை ஆக்கிரமித்த சீனா, அந்த பிராந்தியத்தின் மீது தனது பிடியை மேலும் இறுக்கமாக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டில், தலாய் லாமா தனது அரசியல் அதிகாரத்தை துறந்துவிட்டு, நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். இந்த அரசாங்கம் உலகம் முழுவதும் உள்ள சுமார் 1,30,000 திபெத்தியர்களின் பிரதிநிதியாக உள்ளது.