டி 20 உலகக் கோப்பை.. இந்தியாவை சிக்கல்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களேய்யா!
சென்னை: டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான படுதோல்விக்குப் பிறகு, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பெரும் சிக்கலாகியுள்ளது. இந்தியா அரை இறுதிக்குள் நுழைவது என்பது இந்தியாவின் கையில் மட்டுமல்ல, மற்ற அணிகளும் மனது வைத்தால்தான் உண்டு.
அகமதாபாத்தில் நேற்று நடந்த சூப்பர்-8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்குச் செல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே காண்போம்.
இந்திய அணியின் நெட் ரன் ரேட் -3.800 என மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள இந்தியாவுக்கு, இனி வரும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா-சாவா போராட்டமே.
அரையிறுதிக்குத் தகுதி பெற தற்போது இந்தியாவுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.
இந்தியா தனது அடுத்த ஆட்டங்களில் ஜிம்பாப்வே (பிப்ரவரி 26) மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் (மார்ச் 1) அணிகளை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த இந்த இரண்டிலும் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். குறிப்பாக, பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ரன் ரேட் உயரும். அது கட்டாயம் நடந்த ஆக வேண்டும்.
இது முதல் ஆப்ஷன். அடுத்த ஆப்ஷன்கள் என்று பார்த்தால், தென்னாப்பிரிக்கா தொடர்ந்து வெல்ல வேண்டும். தென்னாப்பிரிக்கா தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் (மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக) வெற்றி பெற்றால், அவர்கள் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடிப்பார்கள். அப்போது மற்ற மூன்று அணிகளும் (இந்தியா, மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே) தலா 2 போட்டிகளில் வென்று சமநிலை பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
ஒருவேளை தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியில் தோற்று, இந்தியாவும் ஒரு போட்டியில் தோற்றால், ரன் ரேட் கணக்குகள் மிகவும் சிக்கலாகிவிடும். அப்போதும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்க மற்ற அணிகளின் தோல்வியையும் ரன் ரேட்டையும் நம்பியிருக்க வேண்டியிருக்கும்.
அதேசமயம், இந்திய அணி இனி மோதவுள்ள இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோற்றால் கூட நமது கதை முடிந்தது. உலகக் கோப்பையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே, சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள அடுத்தடுத்த போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பயங்கரமான வெற்றிகளைப் பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
இதுக்கு பேசாம நேற்றைய போட்டியில் ஜெயிச்சிருக்கலாம் பரமா!