India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
Mar 08, 2026,10:47 PM IST
அகமதாபாத்: உலகமே உற்றுநோக்கிய டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியா 3வது முறையாக டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. மேலும் நடப்புச் சாம்பியனாக உள்ள இந்தியா பட்டத்தையும் தக்க வைத்து புதிய வரலாறும் படைத்துள்ளது.
அனல் பறக்க நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அகமதாபாத் மைதானத்தின் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஒரு இமாலய இலக்கை நிர்ணயித்தனர்.
20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களைக் குவித்தது இந்தியா. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் அரை சதம் போட்டு அசத்தினர். ஷிவம் தூபே கடைசி நேரத்தில் கலக்கினார்.
இதையடுத்து கடினமான இலக்கை நோக்கி விளையாடிய எதிரணியினரை, இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிக்குள்ளாக்கினர். மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே, இந்திய வீரர்கள் ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தியபோது அரங்கம் அதிரச் செய்தது.
குறிப்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா மிரட்டி விட்டார். அபாரமாக பந்து வீசிய அவர் 4 விக்கெட்களைச் சாய்த்து நியூசிலாந்தை நையப்புடைத்து விட்டார்.
19 ஓவர்களில் 159 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா இதுவரை வென்றது இல்லை. அந்த சோகத்தை இன்று முறியடித்து விட்டது இந்திய அணி.
இறுதி ஓவர்களில் இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான ஃபீல்டிங் காரணமாக இந்தியா அபார வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் 3வது முறையாக டி 20 உலகக்கோப்பை மகுடத்தை இந்தியா தன்வசப்படுத்தியது.
அகமதாபாத் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசமும் இந்த வெற்றியைப் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது.