இங்கிலாந்து 2வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி

Su.tha Arivalagan
Jul 07, 2025,11:33 AM IST

பர்மிங்காம் : இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து, மேன் ஆஃப் தி மேட்ச் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஒன்பது போட்டிகளுக்குப் பிறகு இந்தியா முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ஏழு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி டிராவும் ஆனது குறிப்பிடத்தக்கது. கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பும்ரா இல்லாத நிலையிலும் அபார வெற்றி பெற்றது. கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 430 ரன்கள் குவித்தார். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வெற்றி சாத்தியமானது என்று கில் கூறினார்.




போட்டி தொடங்குவதற்கு முன்பு கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் விமர்சனங்களை சந்தித்தனர். பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது மற்றும் இளம் வீரர் ஆகாஷ் தீப்பை அணியில் சேர்த்தது குறித்து கேள்விகள் எழுந்தன. ஆனால், போட்டியின் முடிவில் இந்திய அணி அபார வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் மிகப்பெரிய வெளிநாட்டு வெற்றியை உறுதி செய்தனர். ஆகாஷ் தீப் முதல் முறையாக இங்கிலாந்தில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா இல்லாத குறையை இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் போக்கினர். பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதன் விளைவாக இங்கிலாந்து அணி 608 ரன்கள் இலக்கை அடைய முடியாமல் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


போட்டி முடிந்த பிறகு கில் செய்தியாளர்களிடம் பேசினார். "ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாததால் எங்களால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார்கள்" என்று கூறினார். மேலும், "இது இங்கிலாந்துக்கு வந்த சிறந்த இந்திய அணியாகும். பும்ரா உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். ஆனாலும், எங்களால் எங்கு வேண்டுமானாலும் 20 விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று நம்புகிறோம்" என்றார். ஒரு டெஸ்ட் போட்டியில் 250 ரன்களுக்கு மேல் மற்றும் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் கில் 


தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள அடுத்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.