வரைபடத்தில் இருந்தே அழித்து விடுவோம்.. கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டோம்.. ராணுவ தளபதி

Su.tha Arivalagan
Oct 03, 2025,04:56 PM IST

டெல்லி: உலக வரைபடத்தில் இருந்தே அழித்து விடுவோம். கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ராஜஸ்தானின் அனூப்கரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் ஜெனரல் திவேதி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியப் படைகள் இந்த முறை எந்தக் கட்டுப்பாட்டையும் (Restraint) கடைப்பிடிக்காது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்றால், அதன் புவியியல் இருப்பை (வரைபடத்தில் அதன் இடத்தை) இழக்க நேரிடும். பாகிஸ்தான் வரைபடத்தில் நீடிக்க விரும்பினால், அது அரசின் ஆதரவுடன் பயங்கரவாதத்தைத் தூண்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.


ஆபரேஷன் சிந்தூர் 1.0 செயல்பாட்டில் நாங்கள் கடைப்பிடித்த கட்டுப்பாட்டை இந்த முறை கடைப்பிடிக்க மாட்டோம். நீங்கள் வரைபடத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று பாகிஸ்தானே சிந்திக்கும் வகையில் இந்த முறை நாங்கள் செயல்படுவோம்.




பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்த மறுத்தால், ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் பதிப்பு விரைவில் வரக்கூடும். 


(ராணுவ வீரர்களிடம்) கடவுளின் விருப்பம் இருந்தால், விரைவில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.