Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கிஷன் குமார் சிங் என்ற இந்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.
78 வயதான பெண்ணிடம் சட்ட அமலாக்க அதிகாரி போல் நடித்து மோசடி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 21 வயதான கிஷன் குமார் சிங், வடக்கு கரோலினாவில் உள்ள கில்ஃபோர்ட் கவுண்டியில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கி கணக்குகள் ஆபத்தில் இருப்பதாக கூறி, பணத்தை எடுக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார் கிஷன் குமார் சிங். பாதுகாப்பாக வைப்பதற்காக, பணத்தை எடுக்க சொன்னதாக கில்ஃபோர்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண்ணிடம் பணத்தை வாங்க வந்தபோது அவரை அதிகாரிகள் மடக்கிக் கைது செய்துள்ளனர்.
அவர் தற்போது கில்ஃபோர்ட் கவுண்டி தடுப்பு மையத்தில் $1 மில்லியன் பிணைத்தொகையுடன் கிஷன் குமார் சிங் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மோசடி முயற்சி மற்றும் முதியோரை ஏமாற்றியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கில்ஃபோர்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோசடி செய்பவர்கள் முதியோர் இல்லங்கள் மற்றும் உதவி பெறும் இல்லங்களில் உள்ளவர்களை குறிவைத்து, சட்ட அமலாக்க அதிகாரிகள் போல் நடித்து பணம் கேட்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு போன் செய்து பணம் கேட்க மாட்டோம். உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துள்ளது.
சிங் 2024 முதல் ஓஹியோவின் சின்சினாட்டி அருகே மாணவர் விசா மூலம் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.