Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த மிக முக்கிய விண்வெளிப் பயணமான "விக்ரம் -1" (Vikram-1) ராக்கெட் ஏவும் திட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (SDSC SHAR) இன்று வெற்றிகரமாக விக்ரம் 1 ஏவப்பட்டது. முன்னதாக கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை ஏவுவது 12.05 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ராக்கெட் ஏவப்பட்டது.
தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விக்ரம்-1 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து பூர்வாங்கப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. திட்டமிட்டபடி ராக்கெட் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் (Countdown) தொடங்கப்பட்டு, விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும், கவுண்டவுன் நடந்து கொண்டிருந்த வேளையில், ராக்கெட்டின் முக்கியப் பகுதியில் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு (Technical Snag) இருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு மற்றும் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், உடனடியாக ராக்கெட் ஏவும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, கவுண்டவுன் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு, விக்ரம்-1 ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் குறைபாட்டை சரி செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியில் ராக்கெட் 12.05 மணிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
விண்வெளித்துறையில் இந்தியாவின் தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த விக்ரம்-1 ராக்கெட், சிறிய செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த புவி வட்டப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.