Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!

Su.tha Arivalagan
Jul 18, 2025,01:33 PM IST

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு காபி ஷாப் உள்ளது. உலகம் முழுமைக்கும் ஒரு அழகான பாடத்தையும் அனுபவத்தையும் இந்த காபிஷாப் கொடுக்கிறது. அத்தனை அற்புதமான விஷயத்தை இங்கு நடத்தி வருகிறார்கள்.


தெற்கு ஜகார்த்தாவில் அனைவரையும் அரவணைக்கும் ஒரு புது காபி கடைதான் இந்த காபி காமு (Kopi Kamu). கெபயோரன் பாரு பகுதியில் இந்தக் கடை இருக்கு. இவங்க காபி மட்டும் விக்கிறது இல்லைங்க.. அதை விட முக்கியமான ஒரு செய்தியையும் மக்களுக்கு தினசரி வழங்கிட்டு இருக்காங்க. 




2010-ல ஆரம்பிச்ச இந்தக் கடை, இப்ப நல்ல வாசனை உள்ள காபிக்கு மட்டும் இல்லாம, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவங்களுக்கு வேலை கொடுக்குறதுக்காகவும் பேசப்படுது. சும்மா விளம்பரம் பண்றதை விட, உண்மையாவே சமூகத்துல ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்திருக்காங்க இந்த ஷாப்போட உரிமையாளர்கள்.


டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளோட பெற்றோர்களை ஒருங்கிணைத்து ஒரு அமை்பபு இருக்கு. அவங்களுடன் இணைந்து இந்த காபி ஷாப் ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்தது. அதாவது டவுன் சிண்ட்ரோம் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருவதுதான் அந்த முயற்சி. கடந்த ஆண்டு டிசம்பர் மாசம் ஏழு டவுன் சிண்ட்ரோம் உள்ளவங்களுக்கு வேலை கொடுத்திருக்காங்க. இந்த முயற்சிக்கு வாடிக்கையாளர்களிடையே சூப்பரான வரவேற்பு கிடைச்சிருக்கு.


காரணம், டவுன் சிண்ட்ரோம் இருந்தாலும் கூட அதைத் தாண்டி சிறப்பான முறையில் பணியாற்றியிருக்காங்க அந்த ஏழு பேரும். அவர்களோட நேர்த்தி, பணிவு, கடமை உணர்வுடன் வேலை பார்த்தது, வாடிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட பாங்கு, அமைதி இப்படி எல்லாவற்றிலும் சூப்பர் பாஸ் ஆகியிருக்காங்க ஏழு பேரும். நல்ல நோக்கத்தோட ஒரு வேலையை செஞ்சா, வாடிக்கையாளர்களுக்கும் மத்தவங்களுக்கும் அது ரொம்பப் பிடிக்கும் என்பதுதான் இந்த ஏழு பேரும் காட்டிய பாடமாகும்.




காபி காமு கடைக்கும் இப்போது நல்ல பெயர் கிடைத்துள்ளது. அவங்களோட காபி மட்டுமல்ல, அவர்களின் மனதும் கூட தரமானது என்ற பெயரைப் பெற்றுள்ளனர். டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவர்களை காபி காமு கடையில் வேலைக்குச் சேர்க்கும் யோசனை, வியாபாரத்துக்கான ஒரு திட்டமா இல்லாம, இதோட உரிமையாளர்களான பெசிக் குடும்பத்தோட மனசுல இருந்து வந்த ஒரு நல்ல முடிவா இருந்துச்சு.


காபி காமுவோட மேலாளரும், அதை ஆரம்பிச்ச ரூடி பெசிக்கோட பேரனுமான கேப்ரியல் பெசிக், இந்த யோசனை எப்படி வந்துச்சுன்னு கூறும்போது, எங்க அப்பா ஒரு விழாவுக்குப் போயிருந்தப்போ, அங்க டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளின் பெற்றோர்கள் அமைப்பைச் சேர்ந்த பெற்றோர்களும் அவங்க குழந்தைகளும் காபி வித்துட்டு இருந்தாங்க. அவங்களோட ஆர்வத்தைப் பார்த்து அசந்து போனாலும், அவங்களுக்கு நிரந்தரமா ஒரு தொழில் செய்றதுக்கு இடம் இல்லைங்கிறதை உணர்ந்திருக்காரு. இந்த எண்ணம்தான் இந்த முயற்சிக்குக் காரணமா இருந்துச்சு என்கிறார்.


டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவங்களோட தனிப்பட்ட தேவைகளை (உதாரணத்துக்கு, அவங்களோட உடல் உழைப்புத் திறன்) யோசிச்சு, அவங்க வேலை செய்றதுக்கு ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிக்க பல மீட்டிங்குகளை நடத்துனாங்க. ஒரு சுழற்சி முறை வேலை அட்டவணையை உருவாக்கினாங்க. அதாவது, ஒவ்வொரு ஊழியரும் செவ்வாய், வியாழன், சனி கிழமைகள்ல, இரண்டரை மணி நேரம் வீதம் வேலை செய்யணும். இப்படி ஒரு முறையான ஆனா நெகிழ்வான சூழலை உருவாக்குறதுதான் அவங்களோட நோக்கம். இதன் மூலம் அவங்க நல்லா முன்னேற முடியும்.


காபி காமு ஆரம்பத்துல இதை ஒரு சமூக சேவையா பார்த்தாலும், இது வியாபாரத்துக்கும் ரொம்ப உதவியா இருக்குறது சீக்கிரமே தெரிஞ்சுது. டவுன் சிண்ட்ரோம் ஊழியர்கள் அங்க வேலை செய்றது ஊடகங்களோட கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாம, வாடிக்கையாளர்களோட ஈடுபாட்டையும் அதிகப்படுத்துச்சு.




பெசிக் மேலும் கூறுகையில், எங்களோட பழைய வாடிக்கையாளர்கள் சிலர் டவுன் சிண்ட்ரோம் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்பட்டாங்க. காபி குடிக்க மட்டும் இல்லாம, இந்த ஊழியர்களோட பேசணும்னு நிறைய பேர் வர ஆரம்பிச்சாங்க. இந்த முயற்சிக்கு ஆதரவு கொடுக்கணும்னு நினைச்ச பிரபலங்கள் உட்பட நிறைய புது வாடிக்கையாளர்கள் காபி காமுக்கு வர ஆரம்பிச்சாங்க. இதனால, எங்களோட விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகமாச்சு என்றார் பெசிக்.


ஒரு டவுன் சிண்ட்ரோம் ஊழியர் ஆரம்பத்துல புது ஆட்களைப் பார்த்தா பயந்து, தன்னோட ரூமுக்குள்ள ஓடிடுவாராம். இப்ப அவரு தைரியமா வாடிக்கையாளர்கள்கிட்ட போய் கை குலுக்குறாரு. நாங்க வெறும் வேலை மட்டும் கொடுக்கல, அவங்களோட வாழ்க்கை முறையையும், மத்தவங்களோட பழகுற விதத்தையும் மேம்படுத்தியிருக்கோம் என்று பெசிக் பெருமையுடன் கூறுகிறார்.