Women's day 2025: விட்டு விடுதலையாகி (கவிதை)
கருவறை சுமந்து
சிறையறைக்குள் அடங்கிய காலம்
கர்ப்ப கிரகத்தில் ஆராதித்த காலம்
தெய்வத்தின் மறு உருவாய்!
பூவினும் மெல்லியல் நீ
மென்மை மனம் படைத்தவள் நீ
சுவருக்குள் அடக்கிய சித்திரமாய் நீ!
சின்ன சின்ன உரிமைகள் சிந்தனையில் உதித்த பொழுது
சிறகடித்து வானம் பார்க்க புறப்பட்டாய்
உணர்வுகள் கொந்தளித்து உயிர் எழும்ப நினைத்தபொழுது
சிறகுகள் சிதறடிக்கப்பட்டன
எனக்குள்
ஒரு குரல்
உரிமைக்கு முழக்கம் கொடுக்க
மீண்டும் சிறகுகள் முளைத்தன
உதிரம் கொடுத்து உயிர் கொடுத்த மட்டுமா
உன்னுள் சாதிக்க எத்தனை எத்தனை
பெண்மைக்கு கல்வி கொடுக்க
பெருமிதம் மிளிர்ந்து பெருமை பெற்றது பெண்ணினம்
உன் கால் தடம் பதிக்காத துறைகள் இல்லை
உன் கரம் படாத தொழில்களும் இல்லை
மென்மையானவள் தான் நீ
ஆனால் தன்மானம் காப்பவள்
பனையேறியாய் நிற்பவள் நீ
மயானம் காப்பவள் நீ
விமானத்தில் பறப்பவள் நீ
உலகம் ஆழ்பவள் நீ என்று
அன்னை.. அன்பிற்குரியவளாய் எத்தனை எத்தனை அவதாரங்கள் பெண் சக்திக்கு
ஆண்டாண்டுகளாய்.. அடிமைச் சங்கிலியால்
பிணைக்கப்பட்ட காலம் கடந்து போனது
எனது பெருமைமிகு பெண்ணினம்
"விட்டு விடுதலையாகி"
வையத்தில் கோடோற்றி நிற்கின்றது!
கவிதை: அங்கயற்கண்ணி