பெண்களைக் கொண்டாடுங்கள்.. ஆனால்.. ஒரு நாள் பெருமை வேண்டாம்... வாழ்நாள் அங்கீகாரம் வேண்டும்!
- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று. பெண்களைப் போற்றவும், அவர்களைப் பாராட்டவும், கொண்டாடவும் ஒரு நாள் போதுமா.. நிச்சயம் போதவே போதாது.. வாழ்நாள் முழுக்கத் தொடர வேண்டிய கடமை இது.
பெண்ணே நீ ...!!!கதிரவன் போல் ஒளி வீசுவதற்காக பிறந்துள்ளாய்.
உன் நிழலில் மற்றவர்கள் வாழ பிறந்துள்ளாய்...
ஓர் ஆணுக்கு நிகரானவள்தான் பெண் என்பதற்காக பிறந்துள்ளாய்...
பெண்கள் இல்லாத உலகில் அன்பு நிலைப்பதில்லை... அன்பு இல்லா உலகில் மனிதன் வாழ்வதில்லை.
பெண்களை பெண் என்று ஒற்றைச் சொல்லில் சுருக்கி விட முடியாது. எத்தனை எத்தனை அவதாரங்கள் அவளுக்குள் இருக்கிறது. சொல்லி மாளாது அவள் செய்யும் காரியங்களை.
அன்னை: அன்பினால் அரவணைப்பவள்.
காதலி: கண்களால் கவருபவள்.
மனைவி :மனதால் மயக்குபவள்.
அக்கா: தங்கைக்காக தவிப்பவள்.
தங்கை: அக்காவிற்காக அக்கறை காட்டுபவள்.
சித்தி: சிற்றன்னையாக பிள்ளைகளை பேணுபவள்.
அத்தை: சகோதரனின் குழந்தைகளை அனுசரிப்பவள்.
மாமியார்: தன்மகன்/ மகளை தாரை வார்த்து கொடுத்து மகிழ்பவள்.
பாட்டி: அடுத்த தலைமுறையை பார்த்து பூரிப்பவள்.
அனைத்து துறைகளிலும் மகளிர் பங்கு:
இது மட்டுமா.. எத்தனை எத்தனைத் துறைகளில் பெண்கள் இன்று கோலோச்சுகிறார்கள் தெரியுமா.. அந்த லிஸ்ட்டும் பெருசு.
1. வருங்கால தூண்களாக சிறந்த மாணவ மணிகளை உருவாக்கும் எத்தனையோ ஆசிரியைகள் உள்ளனர்.
2. பல நோய்களிலிருந்து காப்பாற்றும் அறுவை சிகிச்சை செய்யும் எத்தனையோ பெண் மருத்துவர்கள் உள்ளனர்.
3. அடுக்குமாடி கட்டிடம் கட்டும் துறையிலும், மின்வாரியத்திலும் கொடிகட்டி பறக்கின்றனர், எத்தனையோ பெண் பொறியாளர்கள்.
4. இரண்டு சக்கர வாகனங்கள் ,ஆட்டோ, பேருந்து ,லாரி போன்ற பல வாகனங்களை ஓட்டும் எத்தனையோ பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.
5.விமானத்தை இயக்கும் பைலட்டுகள் ,மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ அதிகாரிகளாக எத்தனையோ பெண்கள் பணிபுரிகின்றனர்.
6. குற்றங்களை தட்டிக் கேட்கும் பெண் காவலர்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என எத்தனையோ பெண்கள் உள்ளனர்.
7. பல தொழில்களில், கணினி துறையில், மென்பொருள் துறையில் ,தகவல் தொழில்நுட்ப துறையில் என எத்தனையோ பெண் வல்லுனர்கள் உள்ளனர்.
8. வீட்டைக் காக்கும் இல்லத்தரசிகளாகவும், நாட்டைக் காக்கும் அரசாங்கத் துறையிலும், அரசியலிலும், அமைச்சர்கள் ஆகவும், அரசிகளாகவும், எத்தனையோ பெண்கள் உள்ளனர்.
9. நாட்டுப்புற கலைஞர்கள் சினிமா துறையில் நட்சத்திரங்களாக, விளையாட்டுத்துறையில் வீராங்கனைகளாக, எத்தனையோ பெண்கள் உள்ளனர்.
10. இசைக்கருவிகள் வாசிப்பதிலும் , ஆடல் பாடல்களில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள், தபால் துறையில், வங்கிகளில் ,தனியார் நிறுவனங்களில் அரசாங்க நிறுவனங்களில், சொந்தத் தொழில் புரிபவர்களாகவும், துப்புரவு தொழிலாளிகளாகவும் ஆன்மீகம் ஜோதிடம் அழகு கலை நிபுணர்களாகவும் விவசாயம், நெசவுத்தொழில், இன்னும் எத்தனையோ துறைகளில், தொழில்களில் பெண்கள் தங்கள் கரத்தினையும் பாதத்தினையும் பதித்து பங்கு வகிக்கின்றனர்.
11. மேலும் சிறு தொழில் செய்பவர்கள் ,காய்கறி வியாபாரம் செய்பவர்கள், மீன் விற்பவர்கள், மலர்களைக் கட்டி அழகான பூங்கொத்தாக கட்டி விற்பவர்கள், மற்றும் அனைத்து பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள். ஆனால் அனைவரும் விரும்புவது
ஒரு நாள் பெருமை வேண்டாம்... வாழ்நாள் அங்கீகாரம் வேண்டும்.... என்பதைத்தான்.