சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!

Su.tha Arivalagan
May 07, 2025,12:49 PM IST

கொல்கத்தா: IPL 2025 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. எனவே இன்றைய போட்டியில் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி ஒரு விசேஷமும் இல்லை. ஆனால் KKR அணிக்கு இது முக்கியமான போட்டி. ஏனென்றால் KKR அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடுகிறது. 


KKR அணி இதுவரை ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. CSK அணியை வென்றால் KKR அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு கிடைக்கும். 




KKR அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மிச்சம் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் 17 புள்ளிகள் கிடைக்கும். இதுவும் கூட KKR அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாது.  மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் KKR அணிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஒருவேளை KKR அணி தோல்வி அடைந்தால் ப்ளேஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். இதுதான் தற்போதைய நிலை.


இன்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் KKR மற்றும் CSK போட்டி நடக்குமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரை போட்டி தள்ளிவைக்கப்படும் என்று BCCI எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி சற்று தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது.  பாதுகாப்பு ஒத்திகை மாலை 4:00 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7:30 மணிக்கு விளக்குகள் அணைக்கப்படும். இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.