சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே.. ரெடியா.. மார்ச் 26ல் தொடங்குகிறது.. ஐபிஎல் 2026!

Su.tha Arivalagan
Dec 16, 2025,10:39 AM IST

சென்னை: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 26 அன்று தொடங்கி மே 31 அன்று முடிவடைகிறது. 


இந்த முக்கிய அறிவிப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் அணிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐபிஎல் அதிகாரிகளின் கூட்டத்தில் திங்கட்கிழமை மாலை வெளியானது. அதேசமயம், தொடக்கப் போட்டி எங்கு நடைபெறும் என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது.


இன்று ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக போட்டித் தொடர் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வழக்கமாக, தொடக்கப் போட்டி நடப்பு சாம்பியன் அணியின் சொந்த ஊரில் நடைபெறும். அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் தொடக்கப் போட்டியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மைதானம் போட்டிகளை நடத்த கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.




சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA) மாநில அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மட்டுமே வழங்கியுள்ளது. கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. கடந்த ஜூன் 4 ஆம் தேதி, RCB அணியின் ஐபிஎல் கோப்பை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, மாநில அரசு இந்த மைதானத்தில் பெரிய கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி மறுத்து வருகிறது. இதனால், மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் கூட பெங்களூருவில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.


ஐபிஎல் 2026 தொடக்கப் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்குமா என்ற கேள்விக்கு, ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி, நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று மட்டுமே பதிலளித்தார். கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். சமீபத்தில், சிவக்குமார், அரசு ஐபிஎல் போட்டிகளை நடத்த சாதகமாக இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவிடம் கே.எஸ்.சி.ஏ அதிகாரிகளுடன் பேசி கவலைகளைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.