ஐபிஎல் 2026.. மினி ஏலத்திற்கு அணிகள் ரெடி.. யாரிடம் எவ்வளவு பணம் இருக்கு பாருங்க!

Su.tha Arivalagan
Dec 16, 2025,10:45 AM IST

அபுதாபி: ஐபிஎல் 2026 போட்டித் தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெறவுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகிறது.


இந்தியன் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 26 அன்று தொடங்கி மே 31 அன்று முடிவடைகிறது. இந்த அறிவிப்பை நேற்று ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட நிலையில் இன்று மினி ஏலம் நடைபெறவுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இந்த மினி ஏலத்தில் ஐபிஎல்லின் 10 அணிகளும் கலந்து கொள்ளவுள்ளன.


இதில் அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 64.3 கோடியுடன் ஏலத்தில் நுழைகிறது. இந்த அணியால் இன்னும் 13 பேரை ஏலத்தில் எடுக்க முடியும். 2வது இடத்தில் ரூ. 43.4 கோடியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்த அணியில் 9 இடங்கள் காலியாக உள்ளன. ஹைதராபாத் சன்ரைசர்ஸ் ரூ. 25.5 கோடி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 22.95 கோடி, டெல்லி கேபிடல்ஸ் ரூ. 21.8 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 16.4 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 16.05 கோடி, குஜராத் டைட்டன்ஸ் ரூ. 12.9 கோடி, பஞ்சாப் கிங்ஸ் ரூ. 11.5 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ. 2.75 கோடி என கையிருப்புடன் ஏலத்துக்கு வந்துள்ளன.


ஐபிஎல் 2026 மினி ஏலம் குறித்த எதிர்பார்ப்பு




அபுதாபியில் உள்ள எட்டிஹாட் அரங்கில் நடைபெறும் இந்த ஏலம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவிற்கு வெளியே நடைபெறுகிறது. இதற்கு முன்பு துபாய் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் ஏலம் நடைபெற்றது. 


ஏலத்திற்கு முந்தைய நாள், பிசிசிஐ 19 புதிய வீரர்களைச் சேர்த்து வீரர்களின் பட்டியலை இறுதி செய்தது. இதில் பெங்கால் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஈதன் போஷ் ஆகியோர் அடங்குவர்.


ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் திறனுள்ள அணிகளை உருவாக்க அனைத்து பத்து அணிகளும் ஆர்வமாக உள்ளன. மொத்தம் 77 இடங்கள் காலியாக உள்ளன. இதில் வெளிநாட்டு வீரர்களுக்காக 31 இடங்கள் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக 13 இடங்கள் காலியாக உள்ளன. அதைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 10 இடங்கள் உள்ளன. ஆரம்பத்தில் 1,355 வீரர்களின் பட்டியல் இருந்த நிலையில், 359 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 244 இந்திய வீரர்களும், 115 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். 40 வீரர்கள் அதிகபட்ச அடிப்படை விலையான ரூ. 2 கோடியில் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.


ஏலத்தில் கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற முக்கிய வீரர்கள் மீது அதிக கவனம் இருக்கும். குறிப்பாக, வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், கேமரூன் கிரீனுக்கு அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ஏலத் தொகை ரூ. 25 கோடியைத் தாண்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.