ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
சென்னை: 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
மார்ச் 28, சனிக்கிழமை - பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இரண்டாவது போட்டி மார்ச் 29, ஞாயிறு - மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை அந்த அணியின் முதல் போட்டி மார்ச் 30ம் தேதிதான் வருகிறது. திங்கள்கிழமை குவஹாத்தியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, முதல் 20 போட்டிகளுக்கான (மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை) அட்டவணையை மட்டுமே பிசிசிஐ இப்போது வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் மொத்தம் 84 போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடர் தொடங்குகிறது.