ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா-லக்னோ அணிகள் மோதல்
டில்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு துவங்க உள்ளது.
2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 28ம் தேதி துவங்கியது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 15வது போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியும் மோதுகின்றன. கோல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு இந்த போட்டி துவங்க உள்ளது.
இதுவரை விளையாடி 3 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத கோல்கத்தா அணி ஒரே ஒரு புள்ளியுடன், தரவரிசை பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஆனால் விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி, 2 புள்ளிகளுடன் அணிகளின் தரவரிசை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகிலேயே மிக பழமையான மைதானங்களில் ஒன்றான கோல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் பந்து வீச்சாளர்களை விட பேட்டிங்கிற்கே சாதகமான மைதானம் ஆகும். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்பட்டது இந்த மைதானத்தில் தான். ரன்களை அதிகம் குவிக்க சாதகமான மைதானம் என்பதால் முதலில் பேட் செய்யும் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு இரவு நேரத்தில் குளிர்ந்த சூழல் காரணமாக இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு அது மிகுந்த சவாலாகவும் அமையும்.