வேற்றுமையில் ஒற்றுமை (சிறுகதை)
- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை. வீடே அமைதியாக இருந்தது, அந்த அமைதியைக் கலைப்பது போல் காபியை உறிஞ்சும் சத்தம் மட்டும் கேட்டது. கதிரவன் தன் கையில் இருந்த செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டே, "அனு, இந்த வாரம் நாம எங்கயாவது வெளில போலாமா? ரொம்ப நாளாச்சு" என்றான்.
அனு சமையலறையிலிருந்து வெளியே வந்து, "வெளிலயா? அடுத்த வாரம் தம்பி கல்யாணம் இருக்கு. துணி எடுக்கணும், பாக்கி இருக்கிற வேலையெல்லாம் முடிக்கணும். நீங்க என்னடான்னா வெளில போலாம்னு கூப்பிடுறீங்க?" என்றாள் சற்றே சலிப்புடன்.
இதுதான் கதிரவனுக்கும் அனுவுக்கும் உள்ள வித்தியாசம். கதிரவன் 'தலைவன்' வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நினைப்பவன், இன்றைய பொழுது இன்பமாக இருக்க வேண்டும் என்று கருதுபவன்.
அனு 'தலைவி' . வீட்டின் அச்சாணி, எதிர்காலத்தைத் திட்டமிட்டு நடப்பவள், எதிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவள்.
அவர்களின் திருமண வாழ்க்கை தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இருவருக்குள்ளும் அன்பு குறைவில்லை, ஆனால் அணுகுமுறையில் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது.
கதிரவனுக்கு தனது பர்ஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாது, சாவியை எப்போதும் தேடுவான், ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும்.
ஆனால் அனுவின் மாத பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட உதைக்காது. அனைத்தும் அதன் அதன் இடத்தில் இருக்கும், ஆனால் பொறுப்புகள் அவளை எப்போதும் யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
அன்றும் அப்படித்தான், ஒரு சிறிய விவாதம் .பெரிய மௌனமாக மாறியது. இருவரும் பேசாமல் தத்தமது வேலைகளில் மூழ்கினர். ஒற்றுமை என்ற நூலால் கட்டப்பட்டிருந்தாலும், வேற்றுமை என்ற காற்று அவர்களை அவ்வப்போது அசைத்துப் பார்த்தது.
மதியம் இரண்டு மணி இருக்கும். திடீரென வானம் இருண்டது. கணப்பொழுதில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.
அனு பதற்றமடைந்தாள். "ஐயோ! மொட்டை மாடில வத்தல் காயப்போட்டிருந்தேனே! துணியெல்லாம் வேற இருக்கு!" என்று கத்திக்கொண்டே மாடியை நோக்கி ஓடினாள்.
அவளுக்கு முன்னால் கதிரவன் ஓடினான். இருவரும் மழையில் நனைந்தபடியே துணிகளையும் வத்தலையும் அள்ளினர். அதற்குள் மழை அவர்களை முழுமையாக நனைத்திருந்தது.
கீழே வந்ததும் அனு, "பாத்தீங்களா, நான் சொன்னேன்ல... மழை வரும்னே நினைக்கல. எல்லாம் போச்சு" என்று கவலைப்பட்டாள்.
ஆனால் கதிரவன் அவளைப் பார்த்து பலமாகச் சிரித்தான். "ஏன் சிரிக்கிறீங்க?" என்று அவள் முறைக்க, அவன் அவள் தலையில் இருந்த ஒரு வத்தல் துண்டை எடுத்து காட்டி, "உன் கொண்டையில வத்தல் ஒட்டிருக்கு அனு!" என்றான்.
அனுவின் கோபம் சட்டென மறைந்து, அவளும் சிரிக்கத் தொடங்கினாள்.
அப்போதுதான் அனு கவனித்தாள் – மழை பெய்ததால் கதிரவன் காபி போட்டு எடுத்து வந்திருந்தான். இரு சூடான காபி கோப்பைகளுடன் அவர்கள் பால்கனியில் அமர்ந்தனர்.
"நாம ரெண்டு பேரும் எவ்வளவு வெவ்வேறா இருக்கோம்ல?" என்றாள் அனு காபியைப் பருகியபடி.
"ஆமா..." என்றான் கதிரவன். "ஆனா யோசிச்சுப் பாரு அனு. நீ காபி தூள் மாதிரி, நான் சர்க்கரை மாதிரி. ரெண்டும் ஒண்ணா சேர்ந்தா தான் இந்த அருமையான காபி கிடைக்கும். நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா வாழ்க்கை சலிச்சுடும்."
அனுவிற்கு புரிந்தது. அவளது திட்டமிடல் இந்த குடும்பத்திற்குப் பாதுகாப்பு என்றால், அவனது நிதானமும் மகிழ்ச்சியான போக்கும் இந்த குடும்பத்திற்கு நிம்மதி. வேற்றுமைகள் தான் அவர்களை முழுமையாக்கின.
மழை நின்றிருந்தது. வானில் வானவில் தோன்றியது போல, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே இருந்த வேற்றுமைகள் மறைந்து, ஒற்றுமை என்னும் புதிய ஒளியில் அவர்கள் இல்லம் பிரகாசித்தது.
(சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்)