Kannadasan: தமிழ் ஊற்றை தரணி எங்கும் பரவச்செய்தவன்

Su.tha Arivalagan
Jun 24, 2026,03:44 PM IST

- இரா.மும்தாஜ் பேகம்


கண்ணதாசன் ஒருகாலப்பெட்டகம்

கண்ணதாசன் ஒரு கவிதைப் பேழை

பட்டி தொட்டி எல்லாம் அவன் பாட்டு

பட்டிமன்றமெல்லாம் அவன் பேச்சு


தமிழ் ஊற்றை தரணி எங்கும் பரவச்செய்தவன்

குற்றால அருவியென கொட்டியது அவன் பாட்டு

முக்காலம் பாடுதம்மா முத்தையாவின்

திரை இசைப்பாட்டு

கனமானகருத்துக்களால் உள்ளமதைஉருக்கியவன்

கம்பனைப் போல் இளங்கோவை போல்

காப்பியங்கள் மட்டும் படைத்தவன் அல்ல

திரைக்காவியங்களைப் படைத்து

காலத்தை வென்றவன்




காதல்ஆலயத்தின் அர்ச்சகன்

காதல் மன்னர்களின் ரட்சகன்

பொங்கும் காதலா

புத்தி தரும் தத்துவமா

கண்ணீரின் கரைசலா

எரிமெழுகின் உருகுதலா

ஆனந்த தாண்டவமா ஆண்டவனின் புகழா

இயேசு காவியமா

இஸ்லாமிய பாடல்களா

எல்லாவற்றையும் எழுதித் தள்ளியவன்

மூங்கிலையும் கண்ணனின் புகழ் பாட

முடுக்கிவிட்ட முறுவியல் கவிஞன் அவன்

கற்கண்டு கானங்களை

கவிச்சொற் கொண்டு வடித்தவன்

பொங்கும் பாசத்தை புடம் போட்டு காட்டியவன்

வடம் போட்டு இழுக்காமல்

வருகின்ற வார்த்தைகளை

புடம் போட்ட பொன்னெழுத்தாய்

பொறித்து வைத்த கவிஞன் அவன்

காலத்தை வென்ற கவிஞனுக்கு

என்கவிதையைக் காணிக்கை ஆக்குகின்றேன்

 

(இரா.மும்தாஜ் பேகம், கிரேயிட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)