குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்த ஈரான்.. எரிபொருள் டேங்கர்கள் பெரும் சேதம்

Su.tha Arivalagan
Mar 08, 2026,02:28 PM IST

குவைத் சிட்டி: மத்திய கிழக்கில் இப்போதைக்குப் போர் ஓயாது போலத் தெரிகிறது. குவைத் விமான நிலையத்தைக் குறி வைத்து ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த டிரோன்களை சவூதி அரேபியா இடைமறித்து தாக்கி அழித்து வருகிறது.


மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இரண்டாம் வாரத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த எரிபொருள் டேங்கர்கள் தமடைந்தன.


இது குறித்து குவைத் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தற்காப்பு அமைப்புகள் எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் முக்கியக் கட்டமைப்பு குறி வைக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட சிதறல்கள் விழுந்து சில பொது இடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் தேசிய எண்ணெய் நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.


சவூதி மற்றும் கத்தாரில் தாக்குதல்கள்




மறுபக்கம், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் தூதரகப் பகுதிகளை இலக்கு வைத்து ஏவப்பட்ட 15-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அந்நாட்டு பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்தது. கத்தார் நாடும் தங்கள் வான் எல்லைக்குள் புகுந்த ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.


ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அண்டை நாடுகளைத் தாக்க மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே ஈரானின் நீதித்துறைத் தலைவர் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். "எதிரிகளுக்குத் துணையாக இருக்கும் நாடுகள் மீதான தாக்குதல்கள் தொடரும்" என்று அவர் எச்சரித்திருந்தார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தங்களால் இன்னும் ஆறு மாதங்களுக்குத் தீவிரமாகப் போரிட முடியும் என்றும்ா சூளுரைத்துள்ளது. இதுவும் பரபரப்பைக் கூட்டியுள்ளது


துபாயில் விமான போக்குவரத்து பாதிப்பு


நேற்று துபாய் விமான நிலையத்திற்கு அருகில் மர்மப் பொருள் இடைமறிக்கப்பட்டதால், உலகின் பரபரப்பான அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு வான்வழித் தற்காப்பு நடவடிக்கையின் போது விழுந்த சிதறல்களில் சிக்கி பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தத் தொடர் தாக்குதல்களால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.